Monday, November 1, 2010

காஷ்மீரில் நடப்பது என்ன?

புதுடெல்லி: உயர்ந்த மலைகள், வானத்தை தொட முயற்சிக்கும் அளவில் மரங்கள், அடர்ந்த காடுகள், ஓடைகள், உலகின் மிகப் பிரபலமான தால் ஏரி, அருவிகள், இமய மலை, பனிமலைகள்... இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் இடம் காஷ்மீர். உள்நாட்டினரை மட்டுமன்றி வெளிநாட்டினரையும் கவர்ந்த இடம். இயற்கையின் அமைதி கொட்டிக் கிடந்தாலும், காஷ்மீரில் நிலைமை வேறு.

தீவிரவாதிகள் ஊடுருவல், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல், பிரிவினைவாதிகளின் ஆர்ப்பாட்டம்... இவற்றை தாண்டி இப்போது பொதுமக்களையும் தூண்டிவிட்டு குளிர்காயும் போக்கு அதிகரித்துள்ளது. மக்களை ‘மூளை சலவை‘ செய்துவிட்டதன் விளைவு, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிரச்னை எல்லை கடந்து சென்றுவிட்டது.

கடந்த ஜூன் மாதம் பிரிவினைவாதிகள் ஊர்வலம் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. கலவர கும்பலை விரட்டி அடிக்கும் போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் பயந்து ஓடி ஆற்றில் குதித்திருக்கிறான். ஆற்றில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான். இதுதான் தொடக்கம். சிறுவன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற பிரிவினைவாதிகள், மீண்டும் பொதுமக்களை தூண்டி விட கலவரம் பெரிதானது.
அதன்பின் கடந்த 4 மாதங்களாக பல ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் கல்வீச்சு, அலுவலகங்களுக்கு தீ வைப்பு, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு, தடை உத்தரவு, பரிதாப பலி என அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. இவற்றுக்கு எல்லாம் காரணம், ‘காஷ்மீர் யாருக்கு சொந்தம்‘ என்ற கேள்விதான்.

காஷ்மீருக்கு 4 பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ‘காஷ்மீர் மக்கள்‘. ஒட்டுமொத்த காஷ்மீர் நிலம் இப்போது 3 நாடுகளிடம் பகுதி பகுதியாக பிரிந்து கிடக்கிறது. இதில் இந்தியாவிடம் 43 சதவீத காஷ்மீர் உள்ளது. இதில் ஜம்மு, காஷ்மீர், லடாக், சியாசின் பனிமலைப் பகுதிகள் அடங்கும். பாகிஸ்தானிடம் 37 சதவீதம் உள்ளது. இதில் ஆசாத் காஷ்மீர், கில்ஜிட்டின் வடக்குப் பகுதிகள், பல்திஸ்தான் அடங்கும். சீனாவின் கட்டுப்பாட்டில் 27 சதவீதம் காஷ்மீர் பகுதி உள்ளது. இதில் அக்ஷய் சின் (கடந்த 1962ம் ஆண்டு இந்தியாவுடனான போரின் போது சீனா கைப்பற்றியது.), காரகோரம் அடங்கும்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் காஷ்மீர் என்பது இந்தியாவின் நிலை. ஆனால், பிரச்னைக்குரிய பகுதி காஷ்மீர். அதன் அந்தஸ்து குறித்து முடிவு செய்ய வேண்டியது காஷ்மீர் மக்கள்தான் என்கிறது பாகிஸ்தான். இந்த இரண்டுக்கும் இடையில், அக்ஷய் சின் நிலப்பகுதி திபெத்தின் ஒரு பகுதிதான். திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அக்ஷன் சின் பகுதியும் எங்களுக்குதான் சொந்தம் என்கிறது சீனா.
இந்தியாவின் காஷ்மீரை, பாகிஸ்தான், சீனா நாடுகள் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்துக் கொண்டன. உண்மையில் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் வேறு மாதிரி சொல்கின்றனர்.

‘காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமில்லை, பாகிஸ்தானுக்கும் சொந்தமில்லை. அது தனி நாடாக அறிவிக்க வேண்டும்‘ என்று சொல்கின்றனர். இவ்வளவு இடியாப்ப சிக்கலுக்கு நடுவில் தவிப்பது காஷ்மீர் மக்கள்தான். பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ.யும் காஷ்மீரில் தீவிரவாதிகளை தொடர்ந்து ஊடுருவ செய்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பயந்து காஷ்மீர் பண்டிட்டுகள் (இந்துக்கள்), முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் சொந்த நாட்டுக்குள்ளே அகதிகள் போல் வாழ்கின்றனர். டெல்லியில்தான் பெரும்பாலான காஷ்மீர் முஸ்லிம்களும் பண்டிட்களும் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த மத்திய அரசு, அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பியது.

அதன்பின் 8 அம்ச திட்டத்தை அறிவித்தது. இப்போது, காஷ்மீரில் அனைத்து பிரிவினருடன் பேச்சு நடத்த 3 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்துள்ளது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் காஷ்மீர் தால் ஏரியில் நாமும் பயமில்லாமல் உல்லாச பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
பிரிவினைவாதிகள் கேட்பது என்ன?

காஷ்மீரை தனியாக கொடுத்து விடவேண்டும்‘ என்பதில் 2 பிரிவினைவாத அமைப்புகள் பிடிவாதமாக உள்ளன. இந்த அமைப்புகள்தான் அடிக்கடி போராட்ட அறிவிப்பை வெளியிட்டு மக்களை தூண்டி விடுகிறது. இதில் முக்கியமாக இருப்பது பிரிவினைவாத கொள்கை உடைய ஹுரியத் மாநாட்டு கட்சி. 

இதன் தலைவர் சயத் அலி ஷா கிலானி. மிதவாத கொள்கை உடையவர் மிர்வெஸ். இவர் தலைமையில் ஒரு இயக்கம் உள்ளது. இவரும் காஷ்மீரை தனியாக கேட்கிறார்.  ஆனால், தனி அதிகாரம் வேண்டும் என்கிறார். தவிர ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் (ஜேகேஎல்எப்) யாசின் மாலிக் என்பவரும் காஷ்மீர் வேண்டும் என்று மக்களை திரட்டி வருகிறார். இவர்களுடைய ஆர்ப்பாட்டங்களால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதுதான் மிச்சம்.

3 பேர் குழு அமைப்பு காஷ்மீரில் எதிர்ப்பு

காஷ்மீர் இளைஞர்கள், பெண்கள், அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் என்று ஒன்று விடாமல் எல்லோருடனும் பேச்சு நடத்த மத்திய அரசு 3 பேர் குழுவை அமைத்துள்ளது. இதில் பிரபல பத்திரிகையாளர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா குமார், சி.ஐ.சி. முன்னாள் உறுப்பினர் எம்.எம்.அன்சாரி ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேகேஎல்எப் தலைவர் யாசின் மாலிக் கூறுகையில், “பள்ளிகள், கல்லூரிகளின் பிரச்னையா இது. கல்வியாளர்கள் குழுவை அமைப்பதற்கு? அரசியல் ரீதியாக தீர்வு காணும் திறன் படைத்தவர்களை குழுவில் நியமிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார். http://www.dinakaran.com/specialdetail.aspx?id=19273&id1=22

0 comments:

Post a Comment