Thursday, May 19, 2011

அர்ஜென்டினாவில் சிறிய விமானம் தீப்பிடித்து விழுந்ததில் 22 பேர் பலி

லாஸ் மெனுகோஸ்: தெற்கு அர்ஜென்டினாவில் சிறிய விமான விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 22 பேர் பலியாகியுள்ளனர்.

அர்ஜென்டினாவில் ஒரு குழந்தை உள்பட 19 பயணிகள், 3 சிப்பந்திகளுடன் புறப்பட்ட சாப் 340 டர்போப்ராப் விமானம் லாஸ் மெனுகோஸ் நகர் அருகே தீப்பிடித்து கீழே விழுந்தது. இதில் அதில் பயணம் செய்த அனைவருமே கொல்லப்பட்டனர்.

கோளாறு ஏற்பட்டவுடன் விமானி விமான உரிமையாளரான சோல் ஏர்லைன்ஸிற்கு அவசர செய்தி அனுப்பினார். விமானம் தீப்பிடித்து ஒரு தீப் பந்து போல் தரையில் விழுந்தது என்று அதைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விமானம் நடுவானிலேயே வெடித்திருக்கலாம் என்று உள்ளூர் மருத்துவமனை தலைவர் அலி தெரிவித்தார். நெகுவெனில் இருந்து கொமொடோரோ ரிவாடாவியாவுக்கு சென்ற இந்த விமானம் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இந்த விபத்தில் ஒருவர் கூட பிழைக்கவி்ல்லை என்று விமானத்தின் உரிமையாளரான சோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொரேஷியோ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 8.8 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் 45 நிமிடத்திற்கு பிறகு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அது மேலும் தெரிவித்தது.

விமானம் ஆன்டெஸ் மலையடிவாரத்தில் விழுந்துள்ளதால் மீட்பு பணி மேற்கொள்வது எளிதல்ல என்று லாஸ் மெனுகோஸ் நகர மேயர் இசபெல் கூறியுள்ளார். விபத்து ஏற்பட்ட இடத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காது. அங்கு கடுங்குளிர் நிலவுவதால் மீட்பு பணியை முழுவீச்சில் மேற்கொள்வது கடினம் என்று அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்கள், தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் நண்பர்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க நெகுவென் விமான நிலையத்தில் கூடியுள்ளனர்.

0 comments:

Post a Comment