Tuesday, May 31, 2011

பேஸ்புக் - உண்மைக் கதையுடன் ஒரு செய்தி (srilanka)

கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது. உடனே வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனை எனது சேட் பொக்கெற்றிலிருந்து எடுத்து யார் என்று கதைக்க எங்கே நிற்கிறாய்? ஒரு பெண் குரல்... யார் என்று கேட் டேன் நான்தான் தம்பி உனது பெரியம்மா எனச் சொல்ல, ஓ... என்ன விசயம் என்று கேட்க, ஒருக்கால் வீட்டை வந்து போயேன் என்று சொன்னா. என்ன விசயம் என்று மறுபடியும் கேட்டேன். நேரில் வா சொல்கிறேன் என்று சொல்லிப் போனை பெரியம்மா துண்டித்துவிட்டா.

கொடிகாமத்தில் இருந்து வந்த களைப்பைப் பாராமல் வலிகாமம் பகுதியில் இருக்கும் பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அங்கே நின்ற எல்லோரின் கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

என்ன நடந்தது என்று கேட்டேன். பெரியம்மா உடனே உள்ளே வாவன் என்று அக்கம் பக்கம் பார்த்துச் சொல்லிவிட நானும் உள்ளே பதற்றத்துடன் சென்றேன்.

இதைப் பாரண்டா, பெரியப்பாவின் மண்டையை பக்கத்து வீட்டுப் பெடியன் கொட்டனாலே அடித்து உடைத்து விட்டான். இப்ப ஆஸ்பத்திரியிலே மறிச்சுப் போட்டாங்கள். ஏன் என்ன நடந்தது என்று கேட்க... வேறு என்ன என்ர மகள் கம்பசில படிக்கப் போய் பேஸ்புக்கில தனது படத்தையும் விலாசத்தையும் போன்நம்பரையும் கொடுத்து வைத்ததாலே பிரச்சினை வந்திட்டுதடா என்றார். பிரச்சினை என்ன என்று கேட்க பிரச்சினையோ... வெளிநாட்டில் வேலை பார்க்கிற ஒருவன் இவளது பேஸ்புக்கில் இவளைத் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தி வருகிறான்.

அவன் யாரென்றும் தெரியாது. இவளது போன் நம்பரில கதைக்கிறான். பக்கத்து வீட்டுப் பெடியனுக்கு அவனைத் தெரியும். ஆதலால் பக்கத்து வீட்டுப் பெடியனுடன் அவன் கதைத்து என்ர மகளோடு பேசும்படியும் சொல்லியிருக்கிறான். அவனும் அடிக்கடி என்ற மகளை வீதியில் மறிக்கிறதும் அவனைத் திருமணம் செய்யும்படியும் வற்புறுத்துகிறதும் நாளுக்குநாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதனைக் கண்ட என்ர அவர் போய்க் கேட்டதும் என்ன ஏது என்று சொல்லாமல் தலையில் கொட்டனால் அடித்துவிட்டான்.

நீங்கள் ஏன் பொலிஸுக்குப் போகவில்லை என்று கேட்க... பொலிஸுக்குப் போகப் பயமாக இருக்கிறது. பொலிஸுக்கு முறைப்பாடு செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமோ என்று வெருட்டுகிறான். என்ன நீங்கள் எந்த உலகத்திலே இருக்கிறியள். பேஸ் புக்கில் பிரச்சினைகள்வரும் என்று தெரியாதா என்றேன். எனக்கு என்னடா விளங்கும். பேஸ்புக் என்றால் ஏதோ ஒரு படிக்கிற புத்தகம் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. அது இணையத்தள வசதி என்று. படிச்ச இவளுக்கு என்ன தெரியும். இப்படி மாட்டுப்பட்டுப் போய் இருக்கிறாள்.

சரி சரி நடந்தது நடந்து போச்சு. மகளிட்ட போனைக் கொடுக்காதேங்கோ. இனி ஏதாவது நடந்தால் பார்ப்பம் என்று சொல்லி விட்டு பெரியம்மா வீட்டை விட்டு வெளிக்கிட்டுச் சென்றேன். அந்தப் பக்கத்து வீட்டுப் பெடியன் வீட்டு போட்டிக் கோவில் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான். எனக்குப் பயமாக இருந்தது. அவன் ஏதோ தன்னைக் கட்டுப்படுத்த வந்தனான்போல என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் மோட்டார் சைக்கிளை வேகமாக எடுத்துக் கொண்டு வந்தேன். பார்த்தியளோ உந்த பேஸ் புக்காலை வந்த வினையை. இது உலகத்திலை பேசுகிற ஒரு விடயம். பேஸ்புக் சம்பந்தமாக எத்தனை குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படு கிறது. பேஸ்புக்கைப் பயன் படுத்துபவர்களுக்குத் தெரிய வில்லையா ஆழம் தெரிந்தும் காலை விட்டு விட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறவர்களில் கூடுதலானவர்கள் பெண்கள்தான்.

ஆகவே, பெண்கள்தான் இந்த பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கூட்டிக் கொண்டு கொக்குவில் பகுதிக்கு வரும்போது அங்கே இருந்த நெற்கபேயில் இருந்து பல இளம் பெண்கள் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தேன்.

0 comments:

Post a Comment