Sunday, May 15, 2011

நாடு முழுவதும் பெட்ரோல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ. 5 உயர்வு


Petrol Station

டெல்லி : ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்து விட்டதைத் தொடர்ந்து, மக்கள் மீது கடும் பொருளாதாரத் சுமையை ஏற்றும் வகையில், பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டனர். நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்து விட்டது. ஆனால் நேற்று மாலையே பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தர மறுத்து விட்டனர். கேட்டால், ஸ்டாக் இல்லை என்று வெறுப்படிக்கும், வெட்டிப் பதிலைக் கொடுத்தனர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.

தேர்தலுக்கு முன்பே இந்த விலை உயர்வை செய்ய பெட்ரோலிய நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால் தேர்தலை வைத்துக் கொண்டு பெட்ரோல் விலையை உயர்த்தினால் மக்கள் ஆப்படித்து விடுவார்கள் என்று பயந்து அதைத் தள்ளிப் போட்டு வந்தது மத்திய அரசு.

ஆனால் தற்போது தேர்தல் முடிந்து விட்டதால், இனி மக்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால்,நேற்று விலை உயர்வை அறிவித்து அமலாக்கி விட்டனர்.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் மக்கள் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 5 கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 61.48 விற்கிறது. அது விலை உயர்வுக்குப் பின்னர் 65 ரூபாயாக எகிறியுள்ளது. பெங்களூரில் தான் நாட்டிலேயே மிக அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.10 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இந்த விலை உயர்வு இத்துடன் நிற்காதாம், இன்னும் சில நாட்களில் மேலும் உயர்த்தப் போகின்றனவாம் பெட்ரோலிய நிறுவனங்கள்.

இருப்பினும் டீசல் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றின் விலையில் இப்போதைக்கு மாற்றம் இருக்காது என்கிறார்கள். ஆனால், ஜூன் மாதத்தின் இவற்றின் விலைகளும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
   
தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள செயல் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்தது முதல் இதுவரை பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் உள்ளது. ஒருமுறை கூட ஏற்றிய விலையை உயர்த்தியதில்லை. இத்தனைக்கும் கச்சா எண்ணெயின் விலை, இடையில் வெகுவாக குறைந்த போது கூட ஏற்றிய பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment