Tuesday, May 31, 2011

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து சஹித் அப்ரிடி விலகுவதாக திடீர்அறிவிப்பு


Shahid Afridi
மே 31
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஷாஹித் அப்ரிதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாபஸ் பெற்றாலோ அல்லது தற்போதைய வாரியத்தைக் கலைத்து விட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலோ, தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அப்ரிதி அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. அப்போது 5 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று தொடரையும் அப்ரிதி தலைமையிலான அணி கைப்பற்றியது. இந்தநிலையில் அவருக்கும், பயிற்சியாளர் வக்கார் யூனிஸுக்கும் இடையே பூசல் வெடித்தது. இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து அப்ரிதி நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ் பட் கூறுகையில், அப்ரிதியை நீக்க எங்களிடம் வலுவான காரணங்கள் உள்ளன. சமயம் கிடைக்கும்போது அவற்றை நான் வெளியிடுவேன். காரணமே இல்லாமல் அப்ரிதியை நாங்கள் நீக்கவில்லை என்றார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கண்டிஷன் போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அப்ரிதி. இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஒரு மனிதனுக்கு முக்கியமாக தேவை மதிப்பு,மரியாதை. அதை விட பெரிது எதுவும் இல்லை. என்னை கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் கடும் கண்டனத்துக்குரியது. எல்லாவற்றுக்குமே ஒரு அளவு உள்ளது.

இந்த வாரியத்தின் கீழ் நான் விளையாட மாட்டேன். எனவேதான் விலகுவதாக அறிவிக்கிறேன். ஒரு வேளை வாரியம் தனது முடிவை மாற்றிக் கொண்டால் நானும் எனது முடிவை மாற்றிக் கொள்வேன். அதேசமயம், புதிய வாரியம் அமைக்கப்பட்டால் நான் எனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தயார். ஆனால் தற்போதைய வாரியத்தின் கீழ் விளையாட எனக்கு விருப்பமில்லை.

இப்படி ஒரு அவமரியாதைக்குப் பிறகும் யாராவது தொடர்ந்து விளையாட முன்வருவார்களா?. வீரர்களை மதிக்காத வாரியம் எனக்குத் தேவையில்லை. வாரியத்தின் அவமரியாதையை எதிர்க்கும் வகையில்தான் ஓய்வு முடிவை அறிவிக்கிறேன்.

நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது என்னிடம் எதையும் அவர்கள் சொன்னதில்லை. வீரர்கள் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஒரு உடைந்து போன அணியுடன்தான் நான் விளையாடினேன்.

என்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கருதுகிறேன். அவர்களது தொண்டையில் சிக்கிய முள்ளாக நான் இருந்திருக்கிறேன் என்றார் அப்ரிதி.

அப்ரிதி ஓய்வு பெறுவதாக அறிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2006ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார். பின்னர் உலகக் கோப்பைக்குப் பின்னர் அதுகுறித்து முடிவெடுப்பேன் என்று பின்வாங்கினார். இதையடுத்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளி்ல ஆட ஆரம்பித்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரிலும் பங்கேற்றார். பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக கூறினார்.

இதையடுத்து சல்மான் பட் கேப்டனாக்கப்பட்டார். ஆனால் அவரும் பின்னர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு பதவியை இழந்தார். இதையடுத்து மிஸ்பா உல் ஹக் டெஸ்ட் கேப்டனாக்கப்பட்டார். அப்ரிதி ஒரு நாள் கேப்டனாக தொடர்ந்து வந்தார்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாகவே விளையாடியது. அதிக விக்கெட்களை வீழ்த்தி, அணியின் சிறப்பான வெற்றிகளுக்கு அப்ரிதி காரணமாக இருந்தார்.

இந்த நிலையில்தான் அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் நடைபெறப் போகும் இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரில் அப்ரிதி பங்கேற்று ஆடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

0 comments:

Post a Comment