Saturday, May 14, 2011

தமிழகம்:மக்களின் கோபத்தால் தி.மு.கவுக்கு ஓய்வு

karunanidhi
சென்னை:தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் மீறி தி.மு.க மோசமான தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மக்கள் தி.மு.கவுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச, “காஸ்’ அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசு துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் நடத்திய ஏகபோக ஆதிக்கம், அடிக்கடி மின்வெட்டு, விலைவாசி உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் ஆகியவற்றின் காரணமாக குப்புற கவிழ்ந்துவிட்டது.
இலவசங்களை அள்ளி வீசி, பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவதில் கவனம் செலுத்திய தி.மு.க அரசு மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைக்கு உரிய முடிவுகளை மேற்கொள்ளாததன் காரணமாக பலத்த அடியை இந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மின்வெட்டினால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டது. விஷம் போல ஏறிய விலைவாசியை கட்டுப்படுத்தவும் தன்னால் இயன்ற முயற்சிகளை கலைஞரின் அரசு செய்யவில்லை. இவையெல்லாம் தி.மு.கவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி 204 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. தனிப்பட்ட ரீதியாக 150 தொகுதிகளை கைப்பற்றி சட்டசபையில் தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளது அ.இ.அ.தி.மு.க.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 28 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி, பார்வார்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளன. 234 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணிக்கு 30 இடங்களே கிடைத்துள்ளன. தி.மு.க 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பா.ம.க 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 193 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
பெருவாரியான வாக்குகளை அளித்து தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க-வும் ஏதோ புனிதமான கட்சியல்ல. மக்களுக்கு மாற்று வழி இல்லாததால் தங்களின் கோபதாபத்தை எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க-வுக்கு வாக்குகளால் அளித்து தீர்த்துக்கொண்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில் அ.இ.அ.தி.மு.க-வின் கடந்தகாலம் சர்வாதிகாரமும், பாசிச தொடர்பும்,ஊழலும், மக்கள் விரோத கொள்கைகளாலுமே நிறைந்துள்ளது.
எவ்வளவு தூரம் மக்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவார், தற்போதைய மின்வெட்டு, விலைவாசி பிரச்சனைகளை சமாளிப்பார் என்பது போகபோகத்தான் தெரியும். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை செல்வி.ஜெயலலிதா எடுக்காவிட்டால் வாக்களித்த பலனை தமிழக வாக்காளர்கள் வருகிற 5 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.

0 comments:

Post a Comment