Tuesday, May 31, 2011

இந்தியா வந்த ஜெர்மன் பிரதமர்-விமானத்தை அனுமதிக்காமல் துருக்கி மீது சுற்றவிட்ட ஈரான்!


Angela Merkel
may 31
டெல்லி: ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் இன்று இந்தியா வந்தார். அவரது ஏர்பஸ் விமானம் தனது நாட்டின் மீது பறக்க ஈரான் ஆட்சேபித்ததால், விமானம் துருக்கிக்குத் திருப்பப்பட்டு அந் நாட்டு வான் பகுதியில் சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் விமானத்தில் எரிபொருள் காலியாகத் தொடங்கியதையடுத்து தனது நாட்டின் மீது பறக்க, அந்த விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.


விமானம்  துருக்கி வான்வெளியில் சுற்றியபடியே ஈரான் அதிகாரிகளுடன் துருக்கி அதிகாரிகள் மூலமாக ஜெர்மன் அதிகாரிகள் 1 மணி நேரம் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மெர்கலின் விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

இன்னும் சிறிது நேரம் வானில் வட்டமடித்திருந்தால், எரிபொருள் காலியாகி துருக்கியில் தரையிறங்க வேண்டிய நிலை அந்த விமானத்துக்கு ஏற்பட்டிருக்கும். டெல்லியை அடைவதற்கு மட்டும் தேவையான எரிபொருள் இருந்த நிலையில், அந்த விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

ஜெர்மன் பிரதமருக்காக வாங்கப்பட்ட புதிய ஏர்பஸ் விமானத்தில் மெர்கல் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே அவருக்கு இந்த அனுபவம் நேர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையில் இறங்கியதாகத் தெரிகிறது.
  

0 comments:

Post a Comment