Monday, May 23, 2011

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து!!

சென்னை: மே 23, கடந்த தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை.

இந்த ஆண்டு பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வர ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும் என்றும் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்கவும் உத்தரவிடப்பட்டது.தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஆகிய கல்வித் திட்டங்கள் உள்ளன.

சி.பி.எஸ்.இ., தவிர மற்ற பாடத்திட்டங்கள், அனைத்து வகை மாணவர்களுக்கும் சமமான, தரமான கல்வியைத் தரவில்லை என்றும், இதை போக்க, அனைத்து போர்டுகளையும் இணைத்து, ஒரே வகை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர, கடந்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்தது.

சட்டசபையில் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டு, மாநில பொதுப்பள்ளி வாரியம் ஏற்படுத்தப்பட்டது. பின், நிபுணர் குழு மூலம் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து சிலர், சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், கடந்த கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகமானது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசின் புதிய சமச்சீர் கல்வித் திட்டத்தில், தரமான கல்விக்கான பாடங்கள் இல்லையென பல்வேறு தனியார் பள்ளிகளும், சில கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டப்படி பாடப்புத்தகங்கள் அச்சடிக்க, கடந்த தி.மு.க., அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஏழு கோடிக்கும் அதிகமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன.

கடந்த கால அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமில்லை என்றும், பாடப்புத்தகங்களில் தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய படைப்புகளும், அவர் குறித்த பல்வேறு தகவல்களும் இடம்பெற்றுள்ளன என்றும் புகார்கள் எழுந்தன. இதனால், சமச்சீர் கல்வித் திட்டம் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்தது.

தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஒட்டு மொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது. எனவே, சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்றும் ஆராய, வல்லுனர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்த கல்வி ஆண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், பாடப் புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது

0 comments:

Post a Comment