Saturday, May 14, 2011

எஸ்.டி.பி.ஐக்கு அதிகரித்த வாக்குகள் கேரள அரசியலில் நிர்ணாயகம்

sdpi
திருவனந்தபுரம்:இரு பெரும் முன்னணிகளான யு.டி.எஃப் என்றழைக்கப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் எல்.டி.எஃப் என்றழைக்கப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கு மத்தியில் தனித்து போட்டியிட்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி பெற்ற வாக்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் தேர்தல் முடிவுகளின் கதியை மாற்றியுள்ளது. கொல்லம், இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களின் பல தொகுதிகளில் புறக்கணிக்க முடியாத கட்சியாக எஸ்.டி.பி.ஐ மாறியுள்ளது.
கேரள மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நூலிழை பெரும்பானமையைத்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 72 தொகுதிகளைப் பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி. இடதுசாரி கூட்டணிக்கோ 68 இடங்கள் கிடைத்துள்ளன. ஆகையால் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்ற ஒவ்வொரு தொகுதியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி தோல்விகளைக் கொடுத்துவிட்டு இடதுசாரிகளின் மானம் காத்தது கோழிக்கோடு மாவட்டம். அம்மாவட்டத்திலுள்ள வடகரை சட்டமன்றத் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் சோசியலிஸ்ட் ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட எம்.கே.பிரேம்நாத்திற்கு வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்ட வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த ஜனதாதளம் கட்சியின் சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கைக்குரிய தற்போதைய எம்.எல்.ஏவை களமிறக்கி சி.பி.எம் கடும் போட்டியை ஏற்படுத்திய கண்ணூர் மாவட்டத்தில் அழிக்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்தது எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகளாகும். முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.
திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது எஸ்.டி.பி.ஐ ஆகும்.4 83 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இரு முன்னணிகளுடன் தனித்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளுடன் ஊடகங்களால் உயர்த்திக்காட்டப்பட்ட பா.ஜ.கவை இத்தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய எஸ்.டி.பி.ஐ கேரள மாநிலத்தலைவரான நாஸருத்தீன் எழமரம் நான்காவது இடத்திற்கு தள்ளி 7,645 வாக்குகளை பெற்றுள்ளார்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் கேரள அரசியலில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐயின் எம்.எ.நஜீப் 5,386 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோதமங்கலம், குன்னத்துநாடு, கண்ணூர், மட்டனூர், பூத்தார், நாதாபுரம், கொண்டோட்டி, நிலம்பூர், மலப்புரம், வேங்கரா, மங்கடா, வள்ளிகுன்னு, பொன்னானி, தானூர், தவனூர், பட்டாம்பி, மானந்தவாடி, சொர்ணூர், ஆற்றிங்கல், வாமனபுரம், சேலக்கரை, குருவாயூர் ஆகிய தொகுதிகளிலும் இரண்டரை வருடம் கூட பூர்த்தியாகாத எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித்தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் தனித்துப்போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவிக்கிறார். மேலும் அதிக ஆர்வத்துடன் மக்கள் பிரச்சனைகளில் கட்சி தலையிட இவ்வாக்குகள் உதவும்.

0 comments:

Post a Comment