Wednesday, May 18, 2011

சமையல் கேஸ் விலை ரூ.50 உயரும்?-டீசல் விலையும் உயர்கிறது



Gas Cylinder
சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 வரை உயரும் என தெரியவந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

நாடு முழுவதும் இப்போது 12.30 கோடி சமையல் வாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மண்ணெண்ணெய் பயன்பாட்டை முழுவதுமாக குறைக்கவும், சூழல் பாதுகாப்பு கருதியும், வரும் 2016ம் ஆண்டுக்குள் சமையல் கேஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 16 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் இன்டேன் நிறுவனம் நியமித்துள்ள 670 முகவர்கள் மூலம் 1.25 கோடி பேருக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாரத் கேஸ் நிறுவனத்தின் 150 முகவர்கள் மூலம் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான, கேஸ் சிலிண்டர் விலை ரூ. 352 (14.2 கிலோ) ஆக உள்ளது. உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 1,288 (19 கிலோ).

இந் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் பதற்றம், யூரோவுக்கு எதிராக அமெரிக்கா டாலரின் மதிப்பில் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து கேஸ், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலையை ரூ. 5 உயர்த்திவிட்ட நிலையில் இன்று கேஸ், டீசல் விலை குறித்து ஆலோசிக்க எரிசக்திப் பிரிவுக்கான மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. அதில் விலை உயர்வு இறுதி செய்யப்படலாம்.

இதில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

சிலிண்டர் கிடைப்பதில் தாமதம்:

இதற்கிடையே தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் காரணமாக, பகலில் வீடுகளுக்கு சிலிண்டர்களை எடுத்துச் சென்று வினியோகிக்கும் பணிக்கு ஊழியர்கள் முன்வர தயங்கும் நிலை உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆள்கள் பற்றாக்குறையால் சிலிண்டர் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

20 கிமீ தூரத்துக்கு மேல் சிலிண்டர்களை எடுத்துச் சென்று வினியோகிக்க, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கிலோ மீட்டருக்கு ரூ. 1.40 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகங்கள் அனுமதித்துள்ளன.

சிலிண்டருக்கு பதிவு செய்ய...

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கேஸ் சிலிண்டர்களைப் பெற, 24 மணி நேர தானியங்கி செல்போன் எண் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள எண்களுக்கு செல் போனில் பதிவு செய்தால் உடனடியாக ஒப்புகை பதிலாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது

0 comments:

Post a Comment