Tuesday, January 25, 2011

இந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முகம்மது அலி ஜின்னா - ஜஸ்வந்த் சிங்


ந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முகம்மது அலி ஜின்னா என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர், பாகிஸ்தானை நிர்மாணித்தவர், அந்நாட்டின் தந்தை என்று பல பெருமைகளை பெற்றவர் மறைந்த ஜின்னா.

ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ள ஜின்னா-சுதந்திர இந்தியா பிரிவினை என்ற நூல், தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலின் போது கூறியதாவது:

மகாத்மா காந்தியால் உயர்ந்த மனிதர் என்று பாராட்டப்பட்டவர் ஜின்னா. அவர் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். சுதந்திர இந்தியாவை பிரிவினைப்படுத்தியவர் ஜின்னா என்ற தவறான கருத்துகள் இன்னமும் இருக்கின்றன.. அதைப் போலவே இந்துக்களுக்கு அவர் எதிரானவர் என்ற தவறான எண்ணமும் உள்ளது. அவர் மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். மிகச் சிறந்த இந்தியர். சுதந்திரத்தின்போது மைய அதிகார முறையை கொண்டு வர நேரு முயற்சித்தார். ஆனால், கூட்டாட்சி முறை வேண்டும் என ஜின்னா விரும்பினார். இதை காந்தியும் விரும்பினார். ஆனால், நேரு இவற்றை ஏற்கவில்லை.

இதனால் பிரிவினை கோரினார் ஜின்னா. பிரிவினையை அவர் கோரினாலும் மகாத்மா காந்தி, ராஜாஜி, மெளலானா அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களால் நிறைவாக முடிவு செய்யப்பட்டே பிரிவினை அளிக்கப்பட்டது.

பிரிவினையின்போது இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அன்னியர்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த மன வலியுடன் இதை தாங்கி கொண்டனர். இருப்பினும், இந்தியாவின் ஒற்றுமைக்காக அவர்கள் குறிப்பிடும்படியாக செயல்பட்டனர் என்றார்.

"ஜின்னா பற்றிய கருத்துகள் என்னுடைய சொந்த கருத்துகள் தான். கட்சியின் கருத்து அல்ல. ஜின்னாவை பற்றிய நூலை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நான் எழுதவில்லை.. இந்தியனாக இருந்தே எழுதியுள்ளேன். இது எனது கட்சியின் ஆவணமல்ல.

நான் இவ்வாறு புத்தகம் வெளியிடுவது கட்சிக்கு தெரியும்' என்றார் ஜஸ்வந்த் சிங்.

ஜின்னா விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment