Thursday, January 27, 2011

எகிப்து அதிபருக்கு எதிரான வன்முறை போராட்டங்கள்: 4 பேர் பலி

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் நேற்று இரண்டாவது நாளாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக் கூட்டங்களுக்கு தடைவிதித்திருந்தும் அதை பொருட்படுத்தாது ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

ஹோஸ்னி முபாரக் (82) கடந்த 30 ஆண்டு காலமாக எகிப்து அதிபராக சர்வாதிகார ஆட்சி புரிந்து வருகிறார். பொறுமையை இழந்த மக்கள் அவரது கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். உடனே கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.

இதனால் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு போலீசார் உள்பட 4 பேர் உயிர் இழந்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 150 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்கள் தஹ்ரிர் ஸ்கொயரில் தான் போராட்டத்தை நடத்தினர். அங்கு போலீசார் 50 கண்ணீர் புகை குண்டு வீசியதில் அந்த இடமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்து முழுவதும் போராட்டம் நடந்தது.

தடையை மீறி போராட்டக்காரர்கள் நேற்று கெய்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடினர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி " உணவு, சுதந்திரம் மற்றும் சமத்துவம்" வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

வடக்கு சினாயில் கிராமத்தினர் வாதி அல் நட்ரூன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான வாலிபர்களை விடுவிக்குமாறு நேற்று இரண்டாவது நாளாக ஆர்பாட்டம் நடத்தினர்.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் முதலில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. பின்ர் கையால் எழுதப்பட்ட சிறு துண்டுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தஹ்ரிர் ஸ்கொயரில் கூடிய மக்களிடையே கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அல் ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அங்கு கூடியவர்கள் அதிபர் முபாரக் மற்றும் பிரதமர் அஹமது நசீப் பதவி விலக வேண்டும் என்றும், பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசை உருவாக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்

0 comments:

Post a Comment