மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்பு, பறவைகள் தாங்கள் வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில், தண்ணீரில் மூழ்கி விடாதபடி, தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும், கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத வடிவத்திலும்,தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள் இத்தகைய கூடுகளை உருவாக்குகின்றன. பறவைகள் இந்த உலகில் தோன்றும்போதே,இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில், பறவைகள் எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப் போயிருக்கும். எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை. ஏனெனில்,இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.
சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள்,வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட முறையை கையாளுகின்றன. முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்து, தங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்தது? பறவைகள் எடுக்கும் மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.
சதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம், நிலத்தை விட்டு விட்டு புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில், நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில் இருக்கும் வெப்ப நிலையைவிட, பத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே இருக்கும் புதர்களின் வெப்பநிலை. நிலத்திற்கும், புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் இச்சிறிய பறவைகள் நிலத்திற்கும், புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும்,தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு விட்டு, குளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.
ஐந்தறிவு மாத்திரமே கொண்டு, பகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
பல ஆண்டுகள் படித்து, பட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையை, இச்சிறிய பறவைகள் கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது - கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோ, அல்லது படிப்பறிவோ அவசியமில்லை. அவைகள் தாங்கள் செயலாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ் வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன. பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்: لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான். 22:65 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
0 comments:
Post a Comment