Saturday, January 22, 2011

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய உச்ச நீதிமன்ற நீதிபதி



மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் சலீம் பத்தாம் வகுப்பு படிக்கும் இவன் இஸ்லாமிய முறைப்படி தாடி வைத்து பள்ளிக்கு சென்றான். நிர்மலா கான்வென்ட் என்ற இவனது பள்ளிக்கூட நிர்வாகம் கிருஸ்துவ நிறுவனத்தால் நடத்தப்படுவது. எனினும் சலீம் தாடி வைத்து கொண்டு வர பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை அடுத்து மத்திய பிரதேசத்தின் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் சலீம். ஆனால் உயர் நீதி மன்றமும் சலீமுக்கு அரசியல் சாசனம் வழங்கிய சட்ட உரிமைகளை அளிக்க தயாராக இல்லை. மத்திய பிரதேசத்தில் சங்க பரிவாரின் அரசியல் பிரிவான பிஜேபி தான் கடந்த 2004 லிருந்து ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. இதனால் நீதி கேட்டு உச்சநீதி மன்றத்தை அணுகினான் சலீம். சலீமுக்காக முன்னாள் நீதிபதியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பி.எ.கான் ஆஜரானார்.இவ்வழக்கு நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு (முன்னாள் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி) மற்றும் ஆர்.வீ. ரவீந்தரன் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது, நாடே இவ்வழக்கை ஆவலோடு பார்த்தது. ஆனால் வழக்கு விசாரணையின் போது நீதிபதி கட்ஜு கூறிய விமர்சனங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையே கொந்தளிக்க வைத்தது.முஸ்லீம்கள் தாடி வைப்பதை தலீபாநிசம் என்று கூறிய நீதிபதி தலீபாநிசத்தை நாட்டில் அனுமதிக்க முடியாது என்றார். இன்று தாடி வைக்க அனுமதி அளித்தால் நாளை முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்துதான் பள்ளி கூடம் செல் வேன் என்பார்கள் இதை அனுமதிக்க முடியாது என்றார்.மேலும் வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

இந்திய நாட்டின் சாதரண பாமரனும் கூற தயங்கும் ஒரு விமரிசனத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே வைத்தது முஸ்லீம் சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சி அலையை தோற்றுவித்தது.நாட்டில் உள்ள முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் சிறுபான்மை நலனில் அக்கறை கொண்டோரும் நீதிபதியின் கருத்தை வன்மையாக கண்டித்தனர். இந்நாட்டில் வாழும் மொழி மற்றும் மத சிறுபான்மை மக்கள் தங்கள் மொழியையும் மத கலாச்சாரத்தையும் பின்பற்றவும் பாதுகாக்கவும் பரப்பவும் உரிமை உள்ளவர்கள். இந்திய அரசியல் சாசன பிரிவுகள் இதை தெளிவாக கூறுகின்றன.


நாட்டில் வசிக்கும் சீக்கிய சிறுபான்மை மக்கள் இந்த நூற்றாண்டிலும் இடுப்பில் கத்தியை வைத்து கொண்டு பொது இடங்களில் நடமாடவும் தாடி வைக்கவும் தலைப்பாகை அணியவும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் இதே பிரிவுகளின் கீழ்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாடியும் டர்பனும் அணிந்த சீக்கியர்கள் காவல்துறையில்.ஏன் ராணுவத்தில் கூட பணியாற்றுகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் கூட தாடியும் டர்பனும் வைத்து கொண்டுதான் பணியாற்றுகின்றார். அவரை தலீபான்களின் பிரதிநிதி என்று நீதிபதி கூறுவாரா? தாடியை வைத்து கொண்டுதான் மன்மோகன் சிங் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படித்தார். இன்றும் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் முஸ்லீம்களின் அலீகர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற புகழ் பெற்ற பல்கலை கழகங் களில் படிக்கின்றனர்.சீக்கியர்களின் மத உரிமைக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் ஏன் முஸ்லிம் களுக்கு அளிக்கவில்லை. சட்டம் அளித்தாலும் அதை பாதுகாத்து செயல் படுத்த வேண்டிய நீதி மன்றமும் நீதிபதிகளும் ஏன் அளிக்க மறுக்கின்றனர்? என்பதை முஸ்லிம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கும் தொடரப்பட்டது.

மேலும், அகில இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்டின் செயலாளர் மௌலானா முஹம்மது வலி ரஹ்மானி அவர்கள் தலைமையில் ஒரு குழு ஜூன் 24 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து நீதிபதியின் விமர்சனம் குறித்து உரையாடியது. (மன்மோகன் அவர்கள் சீக்கிய மக்கள் தாடி டர்பனுக்கு வைப்பதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்த பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத் தக்கது.) மேலும் இக்குழு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மௌலியையும் சந்தித்தது.

இந்நிலையில் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் தன்னு டைய விமர்சனத்துக்கு மன்னிப்பு கோரிய தோடு மார்ச் 30 அன்று வழங்கிய தீர்ப்பையும் வாபஸ் வாங்கி கொண்ட தோடு, இவ் வழக்கை வேறு ஒரு நீதிபதி புதிய வழக்காக விசாரிக்க வும் கேட்டுக் கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது தீர்ப்புக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. 1979ல் ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்த கருத்துக்கள் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்தையும் கொந்தளிக்க வைத்தது. அப்போதும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பிரச்சினையை கையிலெடுத்து போராடியது. அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு கண்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு முஸ்லிம்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக அமைந்தன. இதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளிலும் ஒன்று பட்டு போராடினால் வெற்றி நிச்சயம்.

0 comments:

Post a Comment