Showing posts with label IFF. Show all posts
Showing posts with label IFF. Show all posts

Wednesday, April 27, 2011

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்

sulieman
தாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.
2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் சிறையிலடைக்கப்பட்டார். முதல் 7 மாதங்கள் குர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுலைமான் பின்னர் தாயிஃப் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த தாயிஃப் நீதிமன்றம் சுலைமான் 675,000 ரியால் ஈட்டுத் தொகையை கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இல்லையெனில், பணத்தை கட்டும்வரை சிறையிலடைக்கப்படுவார் எனவும் தெரிவித்தது.
சுலைமானோ ஏழ்மையானவர். இந்த பெருந்தொகைக்கு எங்கு செல்வார் அவர். அவருடைய ஸ்பான்சர் தன்னால் உதவமுடியாது என்று கூறிவிட்டார். மேலும் சுலைமான் 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சந்திக்கவும் இல்லை.
இந்நிலையில் வெளிநாட்டு இந்தியர்களின் நலனுக்காக பாடுபடும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் தாயிஃப் கிளை சுலைமானுக்கு உதவ முன்வந்தது. சவூதி அரேபியாவின் இதர பகுதிகளில் செயல்படும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் கிளைகளுடனும், ஜித்தாவில் இந்திய தூதரகத்தின் நல்வாழ்வு பிரிவுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டது தாயிஃப் ஃபெடர்னிடி ஃபாரம். அத்துடன் ஃபெடர்னிடி ஃபாரம் இந்தியாவில் கஷ்டப்படும் சுலைமானின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் அளித்துவந்தது. சுலைமானை விடுவிப்பதற்காக நம்பிக்கை இழக்காமல் ஒவ்வொரு கதவாக தட்டத் துவங்கியது ஃபெடர்னிடி ஃபாரம்.
காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி 675,000 ரியால் இழப்பீட்டுத் தொகையை வழங்க சம்மதிக்க வைத்தது. காப்பீட்டு நிறுவனம் அளித்த காசோலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு சுலைமான் கடந்த 25/04/2011 அன்று விடுதலைச் செய்யப்பட்டார்.
இதுத்தொடர்பாக இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் ரஃபீக் கூறியதாவது: ”நாங்கள் துவக்கத்தில் இவ்வழக்கின் பின்னணியை புரிந்துக்கொண்டோம். சுலைமானின் குடும்பத்தின் அன்றாட தேவைக்கான உதவிகளை அனுப்பி வைத்தோம். ஈட்டுத் தொகைக்காக விபத்துக்குள்ளான ட்ரக் காப்பீடுச் செய்யப்பட்டுள்ள நிறுவனம், ட்ரக்கின் உரிமையாளர் மற்றும் விபத்தில் கொல்லப்பட்ட சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.’ என தெரிவித்தார்.
காப்பீட்டு நிறுவனம், விபத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சவூதி அதிகாரிகளுடன் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்களான ரஃபீக், நவ்ஷாத், ஹுஸைன், அல்தாஃப், சுலைமான் ஆகியோர் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி சுலைமானின் விடுதலையை உறுதிச்செய்தனர்.
சிறையிலிருந்து விடுதலையான சுலைமான் கர்நாடகா மாநிலம் தெற்கு கன்னட மாவட்டத்தில் புத்தூர் தாலுகாவில் நெல்யாடி கிராமத்தைச் சார்ந்தவராவார். இவரது உழைப்பை நம்பி தாய், மனைவி, இரண்டு ஆண் மக்கள், மூன்று பெண் மக்கள் உள்ளனர். சுலைமான் 25 ஆண்டுகளாக சவூதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் இதைப்போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிகளை சவூதியில் சிரமத்திற்கும், சிக்கலுக்கு உள்ளாகும் இந்தியர்களுக்காக புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்