Friday, June 7, 2013

ஜின்னாவின் உரைகளை வெளியிட வேண்டும் – மத்திய தகவல் உரிமை ஆணையம்!

                                  6 Jun 2013 Mohamed Ali Jinnah
 
     புதுடெல்லி: சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தானின் ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னா ஆற்றிய இரண்டு உரைகளை ஆல் இந்தியா ரேடியோ வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணையம்(சி.ஐ.சி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த உரைகளை வெளியிடாமல் தடுத்துவைப்பதற்கான காரணத்தை விளக்கவும் சி.ஏ.சி வலியுறுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக கடந்த சூழலில் சுதந்திரத்திற்கு முந்தைய காரியங்களை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணைய தலைவர் சத்யானந்த மிஷ்ரா கூறினார்.
 
பாகிஸ்தானுக்கு குடியேறிய தலைவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் ஆர்.டி.ஏ 8(1) (ஏ)பிரிவின் படி வெளியிடாமல் இருப்பது சரியல்ல என்று மிஷ்ரா கூறியுள்ளார். ஜின்னாவின் உரைகளை ஆல் இந்தியா ரேடியோவின் ஆவணப் பெட்டகத்தில் இருந்து வெளியிடவேண்டும் என்று கோரி தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால் சமர்ப்பித்த மனுவில் சி.ஏ.சி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. வரலாற்று துறை மாணவர்களுக்கும், நாட்டின் வரலாற்றை அறிய விரும்பும் பொதுமக்களுக்கும் இவை விலை மதிக்க முடியாத சேகரிப்புகளாக அமையும் என்று மிஷ்ரா தெரிவித்துள்ளார். ஆவணங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக முதலில் தெரிவித்த பிரச்சார் பாரதி, ஆர்.டி.ஏ 8(10)(ஏ) வின் படி அளிக்க முடியாது என்று தெரிவித்தது.
 
     நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு, அறிவியல்-பொருளாதார விருப்பங்கள் ஆகியவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை குறித்த இந்த சட்டப்பிரிவின் படி தகவல்களை அளிக்க முடியாது என்பது பிரச்சார் பாரதியின் நிலைப்பாடாகும். சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற தலைவர்களின் விபரங்களை வரும் மாதங்களில் வெளியிடவேண்டும் என்று ஆணையம், ஆல் இந்தியா ரேடியோவுக்கு உத்தரவிட்டுள்ளது. 1947-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி ஜின்னா ஆற்றிய உரையும், தேதி குறிப்பிடாத இன்னொரு உரையும் தங்களின் ஆவணப் பெட்டகத்தில் உள்ளதாக பிரச்சார் பாரதி கூறியிருந்தது. இந்த ஆவணங்கள் குறித்து செய்தி ஒலிபரப்புத் துறையின் கருத்தை ஆராய்ந்ததாகவும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணையத்திற்கு தெரிவித்திருந்தனர். ஜின்னாவின் உரையை கேட்டு ஏதேனும் பாகிஸ்தான் ஏஜன்சியின் கடிதம் கிடைத்திருக்கும் என்றால் உரையின் நகலை அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment