Sunday, June 9, 2013

வெளிமாநிலங்களிலிருந்து பீகாருக்கு யாரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை – பா.ஜ.கவுக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி!

8 Jun 2013

      பாட்னா:வெளிமாநிலங்களிலிருந்து பீகாருக்கு யாரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை என்று பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஐக்கிய ஜனதா தளம். பீகார் மாநிலம் மகராஜ்கஞ்ஜ் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி அந்த மாநிலத்தில் நடைபெற்றுவரும் நிலையில், பாஜகவினரின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாததால்தான் இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

     இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலர் ராஜீவ் பிரதாப் ரூடி இடைத்தேர்தல் தோல்வி பற்றி கருத்து கூறியபோது, அடுத்த பொதுத் தேர்தலின்போது, தமது கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரசார பலம் தேவைப்படுகிறது. இது போன்ற தோல்விகளை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டுமானால் மோடி எதிர்ப்பைக் கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

     ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு நரேந்திர மோடி மீது இருக்கும் வெறுப்புணர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில பாஜக தலைவர்கள் கருத்து கூறிவருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுசீல்குமார் மோடி ஆகியோர் பெயர்களை முன்வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகார் மக்கள் நான்கில் மூன்று பங்கு அளவு வாக்களித்துள்ளனர். இனி வேறு எந்த தலைவரையும் பீகாருக்கு இறக்குமதி செய்யத் தேவையில்லை.

     பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் வெவ்வேறு கொள்கைகளை உடைய கட்சிகள். பொதுவான செயல் திட்டத்தின் அடிப்படையில் பீகாரில் ஆட்சிபுரிந்து வருகின்றன. ஒரு இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் எங்கள் கட்சியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா? புது டெல்லியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றிக் குறிப்பிடும்போது, அனைவருக்கும் ஏற்புடையவராக இருக்க வேண்டுமென சொன்னோம். எங்களுடைய அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.

     பாஜகவின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடியை அறிவிக்க வாய்ப்புள்ளது குறித்து அவரிடம் கருத்து கேட்டபோது, அது அந்தக் கட்சியின் விவகாரம் என்று பதிலளித்தார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டும் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment