6 Jun 2013
சென்னை: தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவிற்க்கு மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேம்பஸ் ஃப்ரண்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்து வரவேற்பதோடு தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றிற்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 34,871 ஆரம்பப் பள்ளிகளும், 9,969 நடுநிலைப் பள்ளிகளும், 5,167 உயர்நிலைப் பள்ளிகளும், 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் ஆகியவை அடங்கும். இந்த பள்ளிகளில் ஒன்றரை கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள்.
இவற்றில் அரசு பள்ளிகளான, 23,522-ஆரம்பப் பள்ளிகள், 7,651-நடுநிலைப் பள்ளிகள், 3,096-உயர்நிலைப் பள்ளிகள், 2,595-மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அரசு பள்ளிகளில் 2-இலட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர் பதவிகளில் ஆண்கள் பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்று பாகுபாடு இல்லாமல் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் மாற்றத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டு வர உள்ளது. அதன்படி இனி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். அதேபோல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளார்கள்.
இதற்க்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், திருமதி. டி.சபீதா அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனை தேசிய மாணவ இயக்கமான ‘கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’, வரவேற்பது மட்டுமின்றி தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment