8 Jun 2013 

அலகபாத்:தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவுச் செய்யப்பட்ட அப்பாவிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கைக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்குரைஞர் ரஞ்சனா அக்னிகோத்ரி உள்ளிட்ட 5 பேர் சார்பில் அலாகாபாத்உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் உள்பட பல குற்றவழக்குகளை உத்தரப் பிரதேச அரசு திரும்பப் பெற்றுள்ளது’ என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், குற்றவழக்குகளை திரும்பப் பெறும் உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், இது தொடர்பாக 6 வாரத்தில் விளக்கமளிக்க வேண்டுமென்று மாநில, மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதற்கு பிறகு எதிர் கருத்தை தெரிவிக்க 4 வார அவகாசத்தையும் நீதிமன்றம் அளித்துள்ளது.
’தீவிரவாத வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதிப் பெறத் தேவையில்லை. ஏற்கெனவே இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதேபோல் இந்த மனுவையும் நிராகரிக்க வேண்டும்’ என்று உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பாக கூடுதல் அட்வக்கேட் ஜெனரல் புல்புல் கோதியால் வாதிட்டார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏற்கெனவே நீதிமன்றம் கேட்டபடி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பான முழுவிவரத்தையும் சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது. விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படித்த பின்புதான் கருத்துத் தெரிவிக்க முடியும். எனினும் நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் அதனை மதிப்போம். அப்பாவிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவோம் என்று தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி செயல்படுவோம்’ என்றார்.
0 comments:
Post a Comment