Sunday, June 9, 2013

தொடரும் சிங்கள பேரினவாதத்தின் அடாவடி!


ஜூன் 08: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் இதுவரை ஒழுங்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சாக்கிட்டு, 5 படகுகளையும், அவற்றில் இருந்த 24 மீனவர்களையும் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அனுராதபுரம் சிறையில் இவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த அதிர்ச்சியில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீளாமல் இருக்கின்ற நிலையில், நேற்றையதினம் 6-6-2013 அன்று கிடைத்த செய்திப்படி, கச்சத்தீவு பகுதியில் ரோந்து கப்பல்களுடன் முகாமிட்டுள்ள இலங்கை கடற்படையினர் மேலும் 25 தமிழக மீனவர்களை சிறைபிடித்து, தங்கள் கப்பலுடன் படகுகளை இணைத்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூன் 19-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, யாழ் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 

கைது செய்த 49 மீனவர்களை அன்னியில், அந்தப் பகுதியிலே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களையும் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதன் காரணமாக 2 படகுகள் பாறையின் மீது மோதி விபத்திற்குள்ளானதாகவும், படகிலே இருந்த மீனவர் முனியசாமி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த 49 மீனவர்கள் தவிர, நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் போஸ், பாபு, ரீகன் ஆகிய 3 மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படை போலீசார் சிறை பிடித்திருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் என்பதால் இவர்களை நிச்சயம் மத்திய அரசு பாதுகாக்காது. எனவே தமிழர்களே தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதே சாலச்சிறந்தது.

*மலர் விழி* thanks, sinthikkavum
 

0 comments:

Post a Comment