Monday, May 27, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு


kanchipuram conference  முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது. 26.05.2013 காலை 10 மணியளவில் மாநாட்டுத் திடலில் மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி கொடியேற்றி வைத்தார். மாலை 3 மணியளவில் பல்லாவரம் கிரீன் மஸ்ஜித் அருகில் தொடங்கிய மாநாட்டின் எழுச்சி பேரணியை மாநில செயலாளர் வி.எம்.ரத்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

     மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முகமது பிலால் தலைமையேற்றார். மாநில செயலாளர் அமீர் ஹம்சா வரவேற்றுப்பேசினார். வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரசீது, பொதுச்செயலாளர் அப்துல் கரீம், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ்,பொதுச்செயலாளர் அணீஸ் முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜீம், பொதுச்செயலாளர் இஸ்மாயீல், திருவள்ளுர் மாவட்ட தலைவர் முஹம்மது சலீம்,பொதுச்செயலாளர் ஃபிர்தவுஸ் ,காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் மீரான்,அப்துல் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது மொய்தீன், யாசர் அரஃபாத், அபுபக்கர், காதர் பாவா, அபுதாஹீர், குத்புதீன், மொய்தீன் ஃபாரூக், பல்லாவரம் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி தலைவர் ஷேக் தாவூத், தாம்பரம் தொகுதி தலைவர் சதாம் உசேன், சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் சாதிக், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி தலைவர் முஹம்மது ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், தமிழக முஸ்லீம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக தலைவர் அமானுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 
     மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி, துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹ்மத், மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் கர்நாடக மாநில தலைவர் கே.எச்.அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியின் இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அனைவருக்கும் நன்றி கூறினார்.
 
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
சமூக நீதிமாநாடு – காஞ்சிபுரம் – தீர்மானங்கள்
 
தீர்மானம் 1:
 
     நமது நாட்டில் முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஏனைய பிறசமுதாயத்தை விட மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ கமிஷன்களான நீதிபதி ராஜிந்தர்சச்சார், மிஸ்ராகமிஷன்களின் அறிக்கை ஆகும். மேலும் மிஸ்ரா கமிஷன் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் உடனடி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது. ஆனால் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்பஐ மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும். என்று மத்திய அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

    மேலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கு இடஒதுக்கீடு தேவையெனில் 7 சதவீதம் பூரண இடஒதுக்கீடு வழங்குவதே நியாமானதாகும். எனவே தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் 2:
 
     கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலையானது மிகுந்த சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கடல்நீரும் கதிர்வீச்சு மிகுந்ததாக மாறி உள்ளது. மேலும், இதனை மூட வேண்டு என்று ஆயிரக்கணக்கான கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அணுஉலையை இயக்கி வருவது கண்டிக்கத்தக்கது. கண்ணை விற்று ஒளியை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை பறித்து சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்தி, மனித உயிருக்கு உலை வைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை உடனடியாக இழுத்து மூட இம்மாநாடு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் 3:
 
     தமிழக சிறைகளில் 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைகைதிகளை அவர்களின் வாழ்நிலை கருதி, ஒரு குற்றவாளிதிருந்த 7 வருடசிறைதண்டனை போதுமானது என்றகாந்தியடிகளின் வாக்குக்கு இணங்க 7 வருடம் சிறையில் கழித்த முஸ்லிம் சிறைகைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
     மேலும் SLR என்ற அதி தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள் பாதிப்படைந்து,உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கோவை அபுதாகீர் என்ற சிறைவாசியை நீதிமன்றம் பரோல் உத்தரவிட்டும், தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த செயல் மனிதாபிமானமற்ற செயல் ஆகும். எனவே கருணை அடிப்படையில் கோவை அபுதாகீர் என்ற சிறைவாசியை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் 4:
 
    மீனவர்கள் அதிகமாக கொண்ட மாவட்டங்களில் ஒன்று காஞ்சிபுரம். ஆனால் அன்றாடம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், காரணமின்றி சிறைபிடிக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது. மேலும், இலங்கை ராணுவத்தினரால் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்படும்போது, அதரனை எதிர்க்கவேண்டிய மத்திய மாநில அரசுகள், கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மீனவர்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திடவும், மத்திய மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் 5:
 
     மத்திய மாநில அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு யு.ஏ.பி.ஏ என்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் என்ற அவசர சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் தடா , பொடா போன்ற கொடிய கறுப்பு சட்டங்களை விட மிகவும் ஆபத்தானதும், அடிப்படை உரிமைகளை பாதிக்க கூடிய சட்டமுமாகும். இச்சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ரௌலட் போன்ற சட்டங்களுக்கு இணையானது. இச்சட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் காவல்துறை முஸ்லிம்களை வேட்டையாடி வருவது கண்டிக்கத்தக்கது. மேலும்,பொய் வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து இச்சட்டத்தின் கீழ் விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலையும், காவல் துறை நிகழ்த்தி வருகிறது. அரசமைப்புச் சட்டம் இந்திய குடிமகனுக்கு தரும்அடிப்படை உரிமைகளை எப்போதும் அவனுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த கறுப்பு சட்டத்தை வாபஸ் பெற இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. அத்துடன் சமிபத்தில் பெங்களூர் குண்டு வெடிப்பை தொடந்து தமிழக முஸ்லிம் இளைஞர்களை போலியாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .இதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு.இவ்வழக்கை சி பி ஐ வசம் ஒப்படைத்து உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க இம்மாநாடு கோருகிறது.
 
மாநில தலைவர் :கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி உரை :
 
சமூகத்தின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டிய அரசுகள் அதற்கான உறுதியான முயற்சிகளை எடுக்கவில்லை. மத்திய சிறுபான்மை அமைச்சகம் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கும் நிதிகளை மாநிலங்கள் முழுமையாக செலவளிப்பதில்லை. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. மத்திய அரசால் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றி தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். வாழ்க்கை தரத்தில் பின்தங்கியுள்ள சமூக மக்களை பிற சமூக மக்களுக்கு இணையாக உயர்த்துவதற்கு இட ஒதுக்கீடு இன்றியமையாதது. அதன் மூலமே தலித்துகளும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் ஓரளவு முன்னேற முடிந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் தற்போது தலித்கள் பழங்குடியின மக்களை விட கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் கீழ் மட்டத்தில் உள்ளனர். இதை சச்சார் கமிஷன் போன்ற பல்வேறு கமிஷன்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பறிந்துரையின்படி 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான ஏதாவது சட்ட ரீதியான தடைகள் இருப்பின் சட்டத்தின் மூலம் இதை நிறைவேற்ற வேண்டும்.
 
    தமிழகத்தில் கடந்த தி.மு.க அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கியது. இது போதாது என முஸ்லிம்கள் போராடி வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது தான் மீண்டும் ஆட்சி பொருப்பேற்றால், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவேன் என முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதி என்ன ஆனது ? தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய அளவிலான பிரச்சார இயக்கத்தினை நடத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் கஷ்டடி யில் கொல்லப்படுவதும் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதும். தொடர்ந்து வருகிறது. தமிழகத்திலும் பெங்களூரு குண்டுவெடிப்பை காரணம் காட்டி கொடூரமான யூ.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் மோசமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையேன கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
 
உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எஸ்.டி.பி.ஐ யின் கோரிக்கை. எனவே இந்த வழக்கினை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி உரை நிகழ்த்தினார்.

இர்பாஃனுள் ஹுதா கல்லூரியின் பட்டமளிப்பு விழா: SDPI கட்சியின் மாநில தலைவர் பங்கேற்பு

melappalayam  26-05-2013

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் இர்பாஃனுள் ஹுதா மகளிர் சரியத் கல்லூரியின் முதலாம் ஆண்டு ஆலிமா, ஹாபிசா பட்டமளிப்பு விழாவில்  SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

யாசின் மாலிக் பயங்கரவாதியா? ராமகோபாலனுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்...

                   

     கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்திருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சி நேற்று பதில் அறிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார். 


     யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி என்றும், பாரதத்திற்கு எதிராக செயல்படுபவர் என்றும், அவர் இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்றும் வர்ணித்துள்ள இராம.கோபாலன், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதா என்றும் கேட்டுள்ளார்.

     யாசின் மாலிக் தலைவராக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது என்பதை இராம கோபாலானுக்கு கூறிக்கொள்கிறோம்.

     காஷ்மீர் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா? அப்படியானால், இந்துக்களுக்காக மட்டுமே இந்திய நாட்டில் பேசிவரும் இராம கோபாலன் போன்றவர்கள் இந்து பயங்கரவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

      காஷ்மீர் மக்களுக்காக போராடினால் அது பாரதத்திற்கு எதிரானது என்று கூறுகிறார். இந்திய நாட்டில் எல்லா மதத்தினரும் வாழ்கின்றனர். ஆனால், இந்து மக்களுக்காக மட்டுமே பேசுகிறீர்களே? இந்த நாட்டில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் இஸ்லாமிய, கிறித்தவ மக்களெல்லாம் இந்தியர்களாக இருந்தும் அவர்களுக்கு எதிராக பேசி, துவேஷத்தையும், மத மோதலையும் ஏற்படுத்தி, நாட்டில் இரத்தக்களறியை ஏற்படுத்தி வருகிறீர்களே, உங்கள் செயலபாடுகள் பாரத நாட்டிற்கும், அதன் ஒற்றுமைக்கும், சமூக இணக்கத்திற்கு எதிரானது இல்லையா?

     பயங்கரவாதம் என்று பேச உங்களுக்கு எந்த வகையிலாவது அருகதை இருக்கிறதா? இறைவனின் பெயரால் அரசியல் நடத்தி, அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் நீங்கள் பயங்கரவாதியா? அல்லது தனது மக்களின் உரிமைக்காக போராடும் யாசின் மாலிக் பயங்கரவாதியா?

     யாசின் மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன? மத்திய அரசுகள் யாசின் மாலிக் போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர் மக்களின் உண்மையான தலைவர்கள் என்கிற காரணத்தினால்தான் என்பதை இராம.கோபாலன் புரிந்துகொள்ள வேண்டும்.
     இலங்கைத் தமிழர்களுக்காக யாசின் மாலிக் நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறும் இராம.கோபாலன், தமிழின மக்கள் சிங்கள பெளத்த இனவாத அரசு இனப்படுகொலை செய்தபோது அதனைக் கண்டித்து ஒரு போராடத்தையாவது நடத்தியது உண்டா? இலங்கைத் தமிழர்கள் வழிபட்டுவந்த இரண்டாயிரம் கோயில்கள் இடித்துத்தள்ளப்பட்டதே, அதற்குக் காரணமான ராஜபக்சவை எதிர்த்து பேசியதுண்டா?

     இந்துக் கோயில்களை இடித்துவிட்டு, புத்த விகாரைகளை நிறுவிவரும் ராஜபக்ச, திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அதனை எதிர்த்து அறிக்கை விடாதது ஏன்? சிங்கள கடற்படையினரால் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டார்களே, அவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்களுக்காக இப்படி அறிக்கை போர் நடத்தியதுண்டா?

     பாரத தேசத்தின் ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள், காவிரியிலும், முல்லைப் பெரியாற்று அணையிலும் கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்தபோது என்றைக்காவது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறீர்களா?

     தமிழ்நாட்டில் இருந்து கேரளத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு வழிபடச் சென்ற சாந்தவேலு என்ற பக்தர், கொதிநீரைக் கொட்டிக் கொல்லப்பட்டாரே, அதனைக் கண்டித்து இராம கோபாலன் ஒரு அறிக்கை விட்டதுண்டா? அவர் ஒரு இந்து, ஏன் அவரை கொதி நீர் ஊற்றிக் கொன்றீர்கள் என்று கேள்வி கேட்டீரா? அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு மெளன விரதம் அனுஷ்டித்த நீங்கள், யாசின் மாலிக் எங்களுக்காக பேச வரும்போது மட்டும் கண்டனக் குரல் எழுப்புவது பச்சை மதவாத அரசியல் என்பதன்றி, வேறென்ன?

     இன்றைய உலகில் தம் இனத்திற்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடும் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தும் ஒரு ஆட்சி, அதிகார மமதை சர்வதேச அளவில் இருக்கிறது. ஆனால், பயங்கரவாதி யார்? விடுதலைப் போராளி யார் என்பதை நமக்கு பின் வரும் சந்ததிகள் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் முன்னெடுக்கும் தமிழின அரசியலும் தெரியும், நீங்கள் முன்னெடுக்கும் மதவாத அரசியலும் புரியும், யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 25, 2013

காலித் முஜாஹித் மரணம்:போலீஸின் பொய்க்கூற்றுகளும், நீதிமன்றங்களின் அநீதியும்!

                       25 May 2013 Khalid death
 
    லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் விசாரணை கைதியாக இருந்த காலித் முஜாஹிதின் கஸ்டடி மரணத்தில் போலீஸின் போலி வேடம் குறித்தும், நீதிமன்றங்களின் அநீதங்களும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. முஜாஹிதின் மரணம் குறித்த போலீசின் அதிகாரப்பூர்வ விளக்கம் சரியென்றால், அவர் ஒரு அமானுஷ்ய மனிதராக இருக்கவேண்டும். அதிகாரப்பூர்வ விளக்கத்தின் படி 32 வயதான காலித் முஜாஹித், மதியம் 3.40க்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு பாரபங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். அங்கு வைத்து அவர் மரணமடைந்ததாக உறுதிச் செய்யப்படுகிறது. பாராபங்கியில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.மினிஸாதி மருத்துவமனைக்கு சென்றபோது இதனை உறுதிச் செய்துள்ளார். ஆனால், இச்சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக 65 கி.மீ தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் காலித் முஜாஹித் விசாரணையை எதிர்கொண்டார் என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார். முஜாஹித் நீதிமன்ற அறையை விட்டு 3.30க்கு வெளியே வந்தார். அவ்வாறெனில் 10 நிமிடங்களுக்குள் அவர் எவ்வாறு 65 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருப்பார்? என்று வழக்கறிஞர் கேள்வி் எழுப்புகிறார்.
 
     உத்தரபிரதேச சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலிதை கைதுச் செய்தது முதல் இத்தகைய முரண்பாடுகள் அவரது விவகாரத்தில் வெளிப்படுகின்றன. ஆனால், பொய் என நிரூபிக்கப்பட்ட வழக்கை தள்ளுபடிச் செய்வதற்கு பதிலாக முஜாஹிதிற்கு ஜாமீன் கூட வழங்காமல் நீதிமன்றங்கள் மறுப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 
      தன்னை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போலீஸ்காரர், போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டியதை தனது கைப்பட புகாராக எழுதி காலித் முஜாஹித் நீதிபதியிடம் அளித்த பிறகும் நீதிபதி அதனை புறக்கணித்துவிட்டார். லக்னோவில் இருந்து 20 கி.மீ கிழக்கே உள்ள பாராபங்கி ரெயில்வே நிலையத்தில் வைத்து இரண்டு தீவிரவாதிகளை கைதுச் செய்ததாக 2007 டிசம்பர் 22-ஆம் தேதி போலீஸ் அறிவித்தது. லக்னோவில் இருந்து 250 கி.மீ தொலைவில் ஜோன்பூரில் மதரஸா(இஸ்லாமிய கல்வி நிலையம்) ஆசிரியராக இருந்த காலித் முஜாஹித் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவராவார். ஜோன்பூருக்கு அருகே ஆஸம்கரைச் சார்ந்த யுனானி மருத்துவர் தாரிக் காஸ்மி கைதுச் செய்யப்பட்ட 2-வது நபர் ஆவார். 2007 நவம்பர் 22-ஆம் தேதி லக்னோவிலும், ஃபைஸாபாத்திலும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களிடமிருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும் போலீஸ் கூறியது. தேசத்துரோகம், தேசத்திற்கு எதிரான போர் ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. ஆனால், முஜாஹிதின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து போலீஸ் ஜோடித்த பொய் வழக்கை தோலுரித்து காட்டியுள்ளனர்.
 
     முஜாஹிதை போலீஸ் கைதுச் செய்ததாக கூறப்படும் தினத்திற்கு 6 நாட்களுக்கு முன்பே அதாவது 2007 டிசம்பர் 16-ஆம் தேதி மக்கள் நெரிசல் மிக்க மார்க்கெட்டில் வைத்து கைதுச் செய்ததாக அவர்கள் கூறுகின்றனர். காலித் முஜாஹிதின் கைது சம்பவம் அவரது சொந்த ஊரான மதியாஹுவில் எதிர்ப்பை கிளப்பியதுடன் இச்சம்பவம் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. உள்ளூர் போலீசாரிடமும் இதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட் போலீஸ் கூறிய பொய்களை அச்சு பிசகாமல் ஏற்றுக்கொண்டார்.
 
      தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படியும் முஜாஹிதின் சொந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில் அவரை கைதுச் செய்தது டிசம்பர் 16 என்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனை உபயோகித்து பாராபங்கி, லக்னோ, பைஸாபாத் ஆகிய விசாரணை நீதிமன்றங்களில் முஜாஹித் மனு அளித்தார். ஆனால், அரசு தரப்பு வாதத்தை முடிக்கும் முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று 2009-ஆம் ஆண்டு நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆனால், 2013-ஆம் ஆண்டிலும் அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்பது முடிவுறவில்லை. இதனைத் தொடர்ந்து எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து ஜாமீன் கிடைக்குமா? எதிர்பார்த்தனர். போலீஸ் கூற்றுக்களில் முரண்பாடுகள் தெளிவானபிறகும், கடுமையான குற்றங்களை முஜாஹித் புரிந்ததாக சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது.
 
     மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான அழுத்தத்தை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் அரசு இம்மாதம் 3-ஆம் தேதி முஜாஹித் மற்றும் காஸ்மிக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறக் கோரி பாராபங்கியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், பாராபங்கி கூடுதல் அமர்வு நீதிபதி கல்பனா மிஸ்ரா அரசின் கோரிக்கையை கூட நிராகரித்துவிட்டார். ஒரு சில உள்ளூர் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர் அரசின் மனுவை நிராகரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளான வழக்கறிஞர்கள் தாம் இம்மனுவை அளித்தனர் என்று காலித் முஜாஹிதின் வழக்கறிஞர் சுமன் கூறுகிறார். எதிர்தரப்பு ஆஜராகாத வேளையில் தனது சேம்பரில் வைத்து வாதம் கேட்ட பிறகு நீதிபதி உத்தரவிட்டதாக சுமன் கூறுகிறார். ஆனால், சூழ்நிலை முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மியின் விடுதலைக்கு உகந்ததாக மாறியது. இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முஜாஹித் விடுதலையானால், தங்களது போலி வேடம் அம்பலமாகும் என்று போலீஸ் அச்சமடைந்ததே முஜாஹிதின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
 
    முஜாஹிதையும், காஸ்மியையும் சட்டவிரோதமாக கைது செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முந்தைய உ.பி மாயாவதி அரசு இதனைக்குறித்து விசாரிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.டி.நிமேஷை நியமித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், அந்த அறிக்கையை அகிலேஷ் யாதவ் அரசு வெளியிடவில்லை. இவ்வறிக்கையில் முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மியை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று நிமேஷ் கமிஷன் கூறியது வெளியானது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் தாரிக் காஸ்மி, கஷ்மீரைச் சார்ந்த ஸஜ்ஜாதுர்ரஹ்மான், அக்தர் ஆகியோரின் உயிருக்கான பாதுகாப்புக் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் கவலை தெரிவித்துள்ளனர். பாராபங்கி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை மே மாதம் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீடு கோரி மே-26 அன்று எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் சமூக நீதி மாநாடு!

                       25 May 2013 SDPI conference
 
     மத்தியில் 10 சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி, பல்லாவரத்தில் மே 26 அன்று சமூக நீதி மாநாடுஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அறிவிப்பு!
 
      தேசிய அளவில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி கடந்த ஏப்ரல் 14 ,2013 முதல் ஏப்ரல் 14, 2014 வரை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக வருகிற 26 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் முஸ்லீம்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி இடஒதுக்கீடு கோரி மாபெரும் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது.
 
     நம் நாட்டில் வாழும் முஸ்லீம்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ளனர் என்பது மத்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகளின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையை மாற்ற மத்திய அளவில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரையும் செய்தது. அந்த பரிந்துரையின் மீது மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
    தமிழகத்தை பொருத்தவரை முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்தாலும் இது தமிழகத்தில் வாழும் 7 சதவீத முஸ்லீம்களுக்கு போதுமானதல்ல. மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தற்போதைய தமிழக முதல்வர் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த பரிசீலனை செய்வோம் என அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் அ.தி.மு.க அரசு எடுக்கவில்லை. எனவே மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீடையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு எஸ்.டி.பி.ஐ கட்சி மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்துகிறது.
மாநாட்டு திடலுக்கு கண்ணியமிகு காயிதே மில்லத் திடல் எனவும், நுழைவாயிலுக்கு சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நுழைவாயில் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாவட்ட துணைத்தலைவர் அன்சாரி, கொடியேற்றி வைக்கிறார். மாநாட்டின் எழுச்சி பேரணி மாலை 3 மணி அளவில் பல்லாவரம் கிரீன் மஸ்ஜித் அருகில் தொடங்கி 5 மணி அளவில் மாநாட்டு திடலை அடைகிறது. பேரணியை மாநில செயலாளர் வி.எம் ரத்தினம் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மாநாட்டிற்கு தலைவராக காஞ்சி மாவட்ட தலைவர் முகமது பிலால் அவர்கள் தலைமையேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் அமீர் ஹம்சா வரவேற்புரையாற்றுகிறார். மேலும் எஸ்.டி.பி. கட்சியின் வடசென்னை, தென் சென்னை,மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தின் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
 
     மேலும்  சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்களும், தமிழக முஸ்லீம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா அவர்களும், கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் அமானுல்லா அவர்களும், வாழ்த்துரை வழங்குகின்றனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் துணைத்தலைவர் எஸ்.எம் ரபீக் அஹ்மத், மற்றும் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், கர்நாடக மாநில தலைவர் கே.எச் அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இறுதியாக வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, நிகழ்ச்சியின் நன்றியுரையை மாவட்ட பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், ஆற்றுகிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்களும்  பெண்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டிற்கு சமூக நீதி போராளிகள் அலைகடலென திரண்டு ஆதரவு தர வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது கறுப்புச் சட்டம்:தேசிய அளவில் எஸ்.டி.பி.ஐ நடத்திய போராட்டம்

                     25 May 2013 SDPI Protest against balck laws
 
     புதுடெல்லி:நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது கறுப்புச் சட்டங்களை சுமத்தி சிறையில் அடைப்பது, கொலைச் செய்வது ஆகிய குற்றங்களை புரிவோருக்கு எதிராக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் போராட்டம் நடத்தியது. நிரபராதி என்று நிமேஷ் கமிஷன் தெரிவித்த காலித் முஜாஹிதை போலீஸ் கொலைச் செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஜி தாராபுரி கூறிய தகவல்களுக்கு மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும், யு.ஏ.பி.ஏ, அப்ஸா, மோக்கா போன்ற கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியது. டெல்லி, மஹராஷ்ட்ரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் இம்மாதம் 28-ஆம் தேதியும், கர்நாடகாவில் 27-ஆம் தேதியும் போராட்டங்கள் நடைபெறும்

மாலேகான்:மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் மீது வழக்கு பதிவுச் செய்யப்படும்

                             25 May 2013 maharastra ATS
 
      புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரணைச் செய்த உயர் ஏ.டி.எஸ் அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட உள்ளது. 2006-மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது இவர்கள் பொய்வழக்கை புனைந்ததை மத்திய அரசு தீவிர விவகாரமாக எடுத்துள்ளது. ஏ.டி.எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுச் செய்ய மஹராஷ்ட்ரா அரசுக்கு உத்தரவிடப்படும் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி இவ்வாரம் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

மத்தியபிரதேச மாநிலத்தில் 2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பலி!

sexual exploitation of a child
 
     மவ்(ம.பி):மத்தியபிரதேச மாநிலம் கிஷன் கஞ்சில் இரண்டு வயது சிறுமியை அடையாளம் தெரியாத காமவெறியன் ஒருவன் பாலியல் வன்கொடுமைச் செய்து கொன்றுள்ளான். பால் மணம் மாறாத அச்சிறுமியை வீட்டின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இச்சிறுமியின் பெற்றோர் தொழிலாளிகள் ஆவர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகும் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கூறுகிறது. போலீஸ் வழக்குப் பதிவுச் செய்து குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக்கோரி ஊர்மக்கள் கிஷன்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டம் நடத்தினர்.

மரண வாக்குமூலத்தை யாரும் பதிவுச் செய்யலாம்!-உச்சநீதிமன்றம்!

                             25 May 2013 No one can witness the death registration high court
 
     புதுடெல்லி:மரண வாக்குமூலத்தை பதிவுச் செய்ய மாஜிஸ்ட்ரேட், போலீஸ் ஆகியோரின் சேவை கட்டாயம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மரண வாக்குமூலத்தை பதிவுச் செய்வோர் மன நல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை என்று நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது. வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள, மரணிக்கும் நிலையில் இருப்பவரின் மன நலம் சரியாக உள்ளது என்று கூறும் மருத்துவரின் சான்றிதழ் தேவையில்லை. மரணிக்கும் நிலையில் இருப்பவர் சாத்தியமான தகவல் தொடர்பு வழிகள் மூலம் அளிக்கும் அனைத்து வாக்குமூலங்களும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 
      மரண வாக்குமூலத்தை நம்பமுடியாது என்று சுட்டிக்காட்டி மருமகளை எரித்துக் கொலைச் செய்த கணவரின் தந்தை, தாய் ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற பெஞ்ச் இதனை தெரிவித்தது.

இஸ்ரத் வழக்கு:சிங்காலின் ஜாமீன் மனு மீதி திங்கள் கிழமை தீர்ப்பு!

                               25 May 2013 ishrat jahan fake encounter
 
     அஹ்மதாபாத்:இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி எஸ்.பி.சிங்காலின் ஜாமீன் மீதான விசாரணையில் தீர்ப்பை வருகிற திங்கள் கிழமை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த பெப்ருவரி மாதம் எஸ்.பி.சிங்காலை சி.பி.ஐ கைதுச செய்துள்ளது. ஆனால், இதுவரை சி.பி.ஐ குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கவில்லை என்று சிங்காலின் வழக்கறிஞர் வாதிட்டார். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி ஜே.ஜி.பார்மர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவ்வழக்கு தொடர்பாக இதர இரண்டு போலீஸ் அதிகாரிகளான பி.பி.பாண்டே, டி.ஜி.வன்சாரா ஆகியோரை விசாரணைச் செய்ய இருப்பதாகவும், இது பூர்த்தியாகாததால் 90 தினங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை திங்கள் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது