Friday, January 4, 2013

கேரளா:பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு!

4 Jan 2013 Death sentence for accused in Kerala rape, murder case
 
     திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு தண்டனையை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
     கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த ஆர்யா என்ற மாணவி அப்பகுதி பள்ளி ஒன்றில்10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், வீட்டில் படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவும் அதை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது ஆர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜேஷ் அப்பெண்ணை பலாத்காரம் செய்து கொலைச் செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றுவிட்டான்.
 
     இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கட்டக்கடா பகுதியைச் சேர்ந்தவரான ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார்தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமாரை மார்ச் 13-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஆர்யாவின் நகைகளையும் மீட்டனர். பின்னர் 3 மாத கால விசாரணைக்குப் பிறகு விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 8-ந் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி ராஜேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுசீந்திர குமார் தீர்ப்பளித்தார்.
 
     பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நன்றி, தூது

ஏரிபுறக்கரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி முடிந்தது! (புகைபடங்கள்)

அதிரை அருகில் உள்ள ஏரிபுறக்கரை 2வது வார்டு MSM நகரில் கடந்த வாரம் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 54 மீட்டர் நீளம் கொண்ட சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2வது வார்டு கவுன்சிலர் இந்த பணிகளை துரிதபடுத்தினார். தஞ்சை தெற்கு மாவட்ட SDPI-ன் தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டார். சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க முயற்ச்சி செய்த கவுன்சிலர் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து கொண்டனர். இதற்க்கு முன் இந்த பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியது குறிப்பிடதக்கது.

சிமெண்ட் சாலை அமைப்பதற்கு முன்

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

பணிகளை பார்வையிடும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்

பணிகள் முடிந்த பின்

Thursday, January 3, 2013

பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை: எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கோரும் வழக்கு – உச்சநீதிமன்றம் ஏற்பு!

3 Jan 2013 SC takes a dim view of criminal MPs, MLAs
 
     படெல்லி:பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புரோமளா சங்கர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;
     “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தி அவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். இதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். ஈவ்டீசிங் குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் உடனே அமல்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
     டெல்லி மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை போல, ஏராளமான மலைவாழ் இன பெண்களும் கடத்தி பலாதகாரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த மனு நாளை முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.
 
     இதற்கிடையே பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மேலும் ஒரு பொது நலன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு,பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய – மாநில அரசுகள் தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நன்றி, தூது

தொடரும் பயங்கரம்:புதுச்சேரி மாணவி பாலியல் பலாத்காரம்!

3 Jan 2013 Girl abducted, raped in Puducherry
 
     புதுச்சேரி:டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் வைத்து பாரமெடிக்கல் மாணவி மரணமடைந்த சம்பவத்தால் நாடே பரபரப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் பாலியல் பலாத்காரம் இந்தியாவின் தேசப் பிரச்சனையாக மாறியுள்ளது.
 
     புதுச்சேரியில் திருபுவனையைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் பேருந்து நடத்துனர் உட்பட இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
 
     டியூசன் வகுப்புக்குச் சென்ற இந்தப் பெண் அவருக்கு நன்கு தெரிந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறையீடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
     திருபுவனையைச் சேர்ந்த இந்த பிளஸ் டூ படிக்கும் இந்த மாணவி விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். இவர் திருபுவனையில் கடத்தப்பட்டு விழுப்புரத்துக்கு கொண்டுவரப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
 
     அவருக்கு புதுச்சேரி அரசாங்க மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சையும், மருத்துவ சோதனையும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
 
     இந்தச் சம்பவத்தில் இருவர் சம்பந்தப்பட்டதாக அந்த மாணவி புகார் செய்துள்ள போதிலும் இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தச் செய்தி புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன நன்றி, தூது

மலேகானில் விரிவான ஆய்வை மேற்கொண்டோம் – ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலம்!

3 Jan 2013 Damaged part a mosque hit by blast in Malegaon is seen
 
     புதுடெல்லி:மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் முன்னர் அங்கு விரிவான சர்வேயை நடத்தினோம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் கைதான ஹிந்துத்துவா தீவிரவாதி டான்சிங் என்.ஐ.ஏவிடம்(தேசிய புலனாய்வு ஏஜன்சி) வாக்குமூலம் அளித்துள்ளான். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி மலேகானில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இந்த சர்வேயை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
 
     இவ்வழக்கில் குற்றவாளிகளான ராஜேந்தர் சவுத்ரி, அமித் என்ற அஸ்வினி சவுகான், ராம்ஜி கல்சங்கரா ஆகியோருடன் டான்சிங் இந்த சர்வேயை நடத்தியுள்ளான். ராஜேந்தர் சவுத்ரி கைதான பிறகு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளைக் குறித்த கூடுதல் தகவல்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது. இவன் அளித்த தகவலின் அடிப்படையிலேயே டான்சிங் கைதானான்.
 
     இந்தூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாக இருந்த டான்சிங் மற்றும் இருவருக்கும் 2006-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் மத்தியபிரதேச மாநிலம் பாக்லி கிராமத்தில் வைத்து கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷி தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளான். இந்த முகாமில்தான் மலேகான் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்பட்டது.
 
     சுனில் ஜோஷியும், மராட்டி மொழி பேசும் இதர சில நபர்களும் இணைந்து வெடிக்குண்டு தயாரிக்க தேவையான பொருட்களை முகாமிற்கு கொண்டுவந்துள்ளனர். லோகேஷ் சர்மாவின் தலைமையில் எலக்ட்ரிகல் துறையில் அனுபவம் கொண்ட ராம்ஜி வெடிக்குண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளான்.
 
     இதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டான்சிங், ராஜேஷ் சவுத்ரி, ராம்ஜி, அஸ்வினி ஆகியோர் மலேகான் சுற்றுவட்டார பகுதிகளில் சர்வே நடத்தியுள்ளனர். பாபா கப்ருஸ்தானில் ஹாமிதியா மஸ்ஜிதை குண்டுவைக்க டான்சிங் தேர்வுச் செய்துள்ளான். ராம்ஜியும், அஸ்வினி சவுகானும் குண்டுவைக்க மோட்டார் சைக்கிள்களை வாங்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் குண்டுவைத்தது ராம்ஜி ஆவான். மஸ்ஜிதில் உள்ள ஒரு மரத்தில் இன்னொரு குண்டை தொங்கவிட்டுவிட்டு ராம்ஜி இடத்தை காலிச் செய்துள்ளான். டான்சிங் மஸ்ஜிதுக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளான். சவுத்ரி மோட்டார் சைக்கிளில் தொழுகைக்காக அணியும் தொப்பியை தொங்கவிட்டுள்ளான். இக்கும்பல் பின்னர் இந்தூருக்கு திரும்பியது.
 
     மலேகானில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பிறகு சேகரித்த வெடிப்பொருட்களின் ஃபாரன்சிக் ரிப்போர்டும், டான்சிங் குறிப்பிட்ட வெடிப்பொருளும் ஒன்று தான் என்று என்.ஐ.ஏ உறுதிச் செய்துள்ளது. குண்டுவெடிப்புகளுக்கு பிறகு வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள ஆசிரமங்களில் வகுப்புகள் நடத்தி காலத்தை ஓட்டியுள்ளனர் சவுத்ரியும், டான்சிங்கும்.
 
     அயோத்தியில் உள்ள சீதாராம்தாஸ் ஆசிரமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர். நன்றி, தூது

செய்துங்கநல்லூரில் மாணவி படுகொலையை கண்டித்து கேம்பஸ் ப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி ரிப்போர்ட்டரில் வந்த செய்தி



     தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே மாணவி புனிதா மாணவி படுகொலையை கண்டித்து கேம்பஸ் ப்ரண்ட் செய்துங்கநல்லூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தி

ஆதிவாசி பெண்கள் மற்றும் சிறுபான்மையின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்-நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்





      கோழிக்கோட்டில் கடந்த டிசம்பர் 26,27-2012 அன்று நடந்த தேசிய கமிட்டி NWF-ன் தேசிய தலைவி ஷாஹிதா தஸ்லீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று தான் கூறிக் கொண்டிருக்கிறது.பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வளவுதான் தண்டனைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு இழந்தது ஈடாகாது.பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.


     பாலியல் கொடுமைகளில் ஈடுபடுகின்றவன் ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் அவன் தண்டிகப்படுவதும் அவன் செல்வந்தனாக இருந்தால் தப்பித்துக்கொள்ளும் நிலைதான் நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். பெண்களுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் இந்த பிரச்சனையில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு வெளியில் கொண்டு வரவேண்டும்.இந்தியாவில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் முறைகளை கல்வியில் (பாடத்திட்டத்தில்)கொண்டு வர வேண்டும்.சமூக சேவகியான அருந்ததி ராய் மணிப்பூரில் பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்களை வெளியே கொண்டு வந்தார்.


     ஆதிவாசி பெண்கள் ,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுகளையும் அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் NWF -ன் தேசிய கமிட்டி கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு
தேசிய ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF)

கௌசியா காலனி சோகம் : கடுங்குளிரால் மூவர் மரணம்!

   Jan3, பா.ஜ.க. என்ற எதிரியை எதிர்கொள்வது எளிது, என எண்ணக்கூடிய அளவுக்கு, காங்கிரசின் துரோக செயல்களால், சொந்த இடத்தை இழந்து, வெட்டவெளியில் கடுங்குளிரில் சமுதாயம் செத்துக்கொண்டிருக்கிறது.

     வாக்களித்த மக்களின் சாபங்களால் தான், தினம் தினம் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, காங்கிரஸ் தலைவர்கள் புழுக்களைப்போல நெளிந்துக்கொண்டிருக்கிறார்கள்.

     டெல்லி மெஹர்வலியின் "கௌசியா காலனி"யில் "வக்ப்" வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூக மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி, அவர்களை கடுங்குளிரில் சாகடித்து வருகிறது, டெல்லியை ஆளும் காங்கிரஸ் அரசு.

     அரசின் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விஷயத்தில் பாராமுகம் காட்டி வருகிறது,காங்கிரஸ் அரசு.
வரலாறு காணாத பனி மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டு, 20 நாட்களில் 3 முஸ்லிம்கள் மரணமடைந்துவிட்டனர்.

     ஒரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. பல அமைப்புக்களும்-தலைவர்களும் கூடிகளைந்தாலும், இதுவரை உருப்படியாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

     பாதிக்கப்பட்ட மக்களை, டெல்லி ஷாஹி ஃபதஹ்பூரி பள்ளியின் இமாம், முப்தி முஹம்மத் முகர்ரம், நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
    அப்போது, எஸ்.டி.பி.ஐ.யின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இந்த அவல நிலைக்கு டெல்லி வக்ப் வாரியத்தின் கவனக்குறைவும் ஒரு முக்கிய காரணம், என பரவலாக கருத்து நிலவுகிறது.

நபிகள் நாயகத்தின் மீது அவதூறு பரப்பும் "சார்லீ ஹெப்டோ"

   Jan3, பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும் "சார்லீ ஹெப்டோ" வாரப்பத்திரிக்கையின் நேற்றைய (02/01/2013) பதிப்பில், நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    சாபத்துக்குரிய இதன் பதிப்பாளன், கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தவறாக எழுதியவன் தான்.

     தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் இவனுக்கு, முதன்முதலில் கடந்த 2006ம் ஆண்டில், டென்மார்க் பத்திரிகையில் நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து வெளிவந்த கார்ட்டூன் தான் தூண்டுகோலாக அமைந்ததாக திமிராக சொல்கிறான்.

Wednesday, January 2, 2013

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்

 dhehlan imam 1    எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் . தெஹ்லான் பாகவி இன்று(02.01.2013) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
 
     நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன . டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி புனிதாவிற்கு நேர்ந்த கொடூரமும் இவற்றிற்கு சிறு சாட்சிகள் மட்டுமே .இதை விட கொடூரமான நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் நடந்து வருகின்றன .இது மிகுந்த கவலைக்குரியது. பெண்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நம் நாட்டில் இது மிகுந்த அவமானகரமான ஒன்று .
     டெல்லி மாணவிக்கு ஏற்ப்பட்ட கொடூரத்திற்கு பின் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டமும், விவாதமும் பாராட்ட வேண்டிய ஒன்றே.இத்தகைய வன்கொடுமைகளை தடுப்பதற்கு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் .இவற்றை வரவேற்கின்றேன்.

     பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டங்களை திருத்துவதால் மாத்திரமே இத்தகு குற்றங்களை தடுத்து விட முடியாது .பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு துணை போவதால் தான் பெரும்பாலான பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் நடவடிக்கையின்றி தப்பிவிடுகின்றனர் .தண்டனை சட்டத்தை எவ்வளவு கடுமையாக்கினாலும் அதிகாரிகளிடம் மாற்றம் ஏற்படுத்தாத வரை இந்த சட்டங்களால் தீர்வு ஏற்படாது.
 
     தூத்துக்குடி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உடன் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்ட பிறகே காவல்துறை உரிய நடவிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே பாலியல் வன்கொடுமை உட்பட குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
     அதோடு பாலியல் வன்முறைகளை தூண்டும் விதமாக நாடெங்கும் ஆபாசம் அதிகிரித்து வருகிறது. குறும்படம், சினிமா, மற்றும் சமூக இணைய தளங்களில் ஆபாசம் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
     பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்து குற்றங்களுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மதுபானங்களே. இவற்றை அரசே தலைமையேற்று விற்பனையை அதிகரித்து விட்டு பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களை தடுக்க போகிறோம் என அரசு அறிவிப்பது கேலியான ஒன்று எனவே மதுவை நாடு முழுவதும் தடை செய்வதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க ஆக்கபூர்வ நடவடிக்கையாக அமையும்.
 
     எனவே மத்திய மாநில அரசுகள் மக்களை சமாதனப்படுத்த எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகமட்டும் அறிவிப்புகளை செய்யாமல் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இதுபோன்ற ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8.1.2013 செவ்வாய் கிழமை சென்னை மெம்மோரியல் ஹால் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில பொது செயலாளர் M.ரபீக் அஹமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.