Showing posts with label itamil. Show all posts
Showing posts with label itamil. Show all posts

Tuesday, April 19, 2011

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிரியாவில் துப்பாக்கிச் சூடு.


சிரியாவில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். இதனால், அங்கு மக்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

சிரியாவில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம், ஒரு வாரத்தில் ரத்து செய்யப்படும்' என, கடந்த 16ம் தேதி, அதிபர் பஷர் அல் அசாத் அறிவித்தார். அதை ஏற்காத மக்கள், 17ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஹோம்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் மீது பாதுகாப்பு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 அப்பாவி மக்கள் பலியாயினர். அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இந்நிலையில், "சிரியா நகரங்களில் செய்தித் தொடர்பாளர்கள் இயங்க முடியாத நிலை இருப்பதால், அவற்றில் என்ன நடக்கின்றது என்று சரிவரத் தெரியவில்லை' என, "அல் ஜசீரா' நிருபர் ஒருவர் கூறினார். இறுதிச் சடங்கினை தொடர்ந்து சண்டைகள் நிகழக் கூடும் என்ற பீதியில் மக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் சூறாவளி: 18 பேர் பலி


சீனாவின் தென் பகுதியில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மேகவெடிப்பு, பயங்கர சூறாவளியில் சிக்கி 18 பேர் பலியாகினர். 155 பேர் காயம் அடைந்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், நேற்று பயங்கர சூறாவளி வீசியது. அதோடு, ஆலங்கட்டி மழையும் பெய்தது. குவாங்÷ஷாவூ, போஷன், ஷாவோகிங் மற்றும் டொங்குவான் நகரங்கள் இதில் பெரும் பாதிப்படைந்தன. மணிக்கு 164 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால், 45 வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்து 87 எக்டேர் பரப்பளவு வயல்வெளிகளில் பயிர்கள் நாசம் அடைந்தன. 3, 200 பேர் பாதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புயல் மற்றும் மழையால், இப்பகுதியில், 66 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, April 18, 2011

அவசரநிலை சட்டம் சிரியாவில் ரத்தாகிறது.

சிரியாவில், 1963 முதல் அமலில் இருந்து வரும் அவசரநிலை சட்டம், அடுத்த வாரம் ரத்து செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் அறிவித்துள்ளார். இதனால் அங்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிரியாவில், எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம், அவசர நிலை சட்ட ரத்து, அதிபர் பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், கடந்த வாரம் அமைச்சரவையைக் கலைத்த அதிபர் அசாத், புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
நேற்று அந்த அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது. அப்போது அதில் அசாத் பேசியதாவது:கடந்த 48 ஆண்டுகளாக அமலில் இருக்கும் அவசரநிலைச் சட்டம், அடுத்த வாரம் ரத்து செய்யப்படும். இச்சட்ட நீக்கத்தால் நாட்டில் சீர்குலைவு எதுவும் ஏற்பட்டு விடாது. எனினும் அன்னிய சக்திகள், சிரிய மக்களைத் தூண்டி விட்டு குளிர்காய நினைக்கின்றன.அவசர நிலை சட்ட நீக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சட்டக் குழு, தன் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரைவில் அந்தப் பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்படும். அதன்படி, அவசர நிலைச் சட்டம் நீக்கப்படும். அதிகபட்சமாக, அடுத்த வாரத்துக்குள் சட்டம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அசாத் தெரிவித்தார்.

Sunday, April 17, 2011

தேர்தல் திருவிழா ஓய்ந்தது : சூடுபிடிக்குது சூதாட்டம்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், எந்த கூட்டணி வெற்றி பெறும் என்ற சூதாட்டம் துவங்கி உள்ளது. இதில், 100 ரூபாய் முதல், அதிகபட்சமாக பல லட்ச ரூபாய் வரை பந்தயம் கட்டப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததால், சில மாதமாக தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா ஓய்ந்துள்ளது. இந்நிலையில், எந்த கூட்டணி வெற்றி பெறும், யார் முதல்வர் என்ற சூதாட்டம் துவங்கி உள்ளது.

தமிழகத்தில், அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், தி.மு.க., 90 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பணம் கட்டப்படுகிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் கருணாநிதி என்றும், ஜெயலலிதா எனவும் பணம் கட்டுகின்றனர். தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால், ஸ்டாலின் முதல்வர் ஆவார் எனவும், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஜெயலலிதா மீது உள்ள வழக்குகள் காரணமாக, மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு வருவார் எனவும் பணம் கட்டப்படுகிறது.

தமிழகத்தில் காங்., போட்டியிட்ட, 63 தொகுதிகளில், 10 தொகுதிகளுக்கு குறைவாகவே வெற்றிபெறும் எனவும், பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும், ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெறும் எனவும் பணம் கட்டப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எனவும், தனிப்பெரும்பான்மை பெற்று திராவிட கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் எனவும் இருவேறு விதமாக பந்தயம் வைக்கின்றனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா, ஒரு தொகுதியில் வெற்றி பெறும் எனவும், வெற்றி பெறாது எனவும் பந்தயம் கட்டுகின்றனர்.

இது தவிர, அமைச்சர்களாக உள்ளவர்களில் தோல்வி அடைபவர்கள் பட்டியல் தயாரித்தும் பந்தயம் கட்டுகின்றனர். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைவார் என, அ.தி.மு.க.,வினர் அதிக அளவில் பணம் கட்டி வருகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதும் பந்தய பொருளாகி உள்ளது.

இந்த சூதாட்டம் தமிழகம் முழுவதும் கனஜோராக நடந்து வருகிறது. பணம் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், பிளாட்டுகள், வீடுகளை கூட சூதாட்டத்தில் பணயமாக வைத்துள்ளனர். வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்ற சேலத்தில் வெள்ளியை வைத்தும், ஈரோட்டில் ஜவுளிகளை பணயமாக வைத்தும் சூதாட்டம் நடக்கிறது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளதால், இந்த சூதாட்டம் மேலும் சூடுபிடிக்கும் என்கின்றனர் சூதாடுவோர்.

வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம்: உலக வங்கி தகவல்


வறுமையை ஒழிப்பதில் இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் தெரிவித்திருக்கின்றன.

மூன்றில் இருபங்கு வளரும் நாடுகள் வறுமை ஒழிப்பின் முக்கிய இலக்குகளை எட்டும் நிலையில் இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட "உலக கண்காணிப்பு அறிக்கை 2011' என்கிற அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட கொள்கைகள், வேகமான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இந்த இலக்குகளை வரும் 2015-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ரூ.60-க்கும் குறைவாகப் பெறுவோர் கடும் வறுமையில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்தப் பிரிவில் கடந்த 2005-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 140 கோடி பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 180 கோடியாக இருந்தது. வரும் 2015-ம் ஆண்டில் 88.3 கோடியாக இது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பத்தாண்டிலும் ஏழைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்கிற இலக்கை எட்டுவதில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் திறம்படச் செயல்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. ஆப்பிரிக்காவின் 17 நாடுகளில் அதிக அளவில் வறுமை இருக்கிறது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையின் "நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளில்' ஒன்றான இருபால் சமநிலையை அடைவதிலும் வளரும் நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளன. உயர்நிலைக் கல்வி வசதி, பாதுகாப்பான குடிநீர், தொடக்கக் கல்வியை நிறைவு செய்வது என பல்வேறு அம்சங்களிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும் இந்த முன்னேற்றம் மிக மெதுவாக இருப்பதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

பொது சுகாதாரம் தொடர்பான இலக்குகளை எட்டுவதில் 45 சதவீத வளரும் நாடுகள் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. பிரசவகால மற்றும் குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்கான இலக்குகளை எட்டுவதிலும் முறையே 39, 38 சதவீத நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன.

வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, ஐ.நா. நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் வளர்ந்த நாடுகளிலேயே கூட இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது என உலக வங்கியின் வளர்ச்சி அம்சங்களுக்கான இயக்குநர் ஹான்ஸ் டிம்மர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை முடுக்குவது, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவை குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என பன்னாட்டு நிதியத்தின் துணை இயக்குநர் பிரீடன்கம்ப் கூறினார்.

Friday, April 15, 2011

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் கைது

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் செவ்வாய்க்கிழமை திடீரெனக் கைது செய்யப்பட்டார். அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 நாட்கள் நடைபெற்ற மக்களின் அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து, ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஹோஸ்னி முபாரக் (வயது 82) உல்லாச மையம் ஒன்றில் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியாக இல்லையெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஷரம் அல் ஷேக் எனும் மையத்துக்கு சட்டத் துறை அதிகாரிகள் சென்றனர். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லையென அவர் கூறியதால் அந்த மையத்திலிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர் எதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விவரங்கள் எதும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவருக்கு இதய நோய் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் மருத்துவமனையில் முபாரக்கிடம் விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷரம் அல் ஷேக் மையம் அருகே முபாரக் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முபாரக் மகன்களைக் கைது செய்து அழைத்து வந்த காவல்துறை வாகனத்தை கற்கள், பாட்டில்கள் வீசித் தாக்கினர்.

7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு: பிரவீண் குமார்

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 16) மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

எந்தெந்த வாக்குச் சாவடிகள் என்பது குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் 5 தொகுதிகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சாமந்திக்குப்பத்தில் உள்ள 55, 56 எண்ணுள்ள வாக்குச் சாவடிகள், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி ஆனந்தமங்கலத்தில் உள்ள 121 எண் வாக்குச் சாவடி, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வளையவட்டம், பருத்திகுடியில் உள்ள 106, 107 எண்ணுள்ள வாக்குச் சாவடிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி 164 எண் வாக்குச் சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரத்தில் உள்ள 146 எண் வாக்குச் சாவடி ஆகியவற்றில் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

எதற்காக மறுவாக்குப் பதிவு: கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும், கடலூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை சில மர்மநபர்கள் தாக்கி சேதப்படுத்தியதாலும், திருவிடைமருதூரில் தவறான இடத்தில் வாக்குச் சாவடிகளை அமைத்ததால் வாக்காளர்களை வாக்களிப்பதை புறக்கணித்தனர்.

எந்த விரலில் மை: மறுவாக்குப் பதிவுக்கு புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே வாக்களித்த போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. மறுவாக்குப் பதிவில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கையின் நடு விரலில் மை இடப்படும்.

பொதுத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கும் வாய்ப்பை இழந்த 7 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் மறுவாக்குப் பதிவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 13, 2011

லிபியாவில் மீண்டும் வெடிக்கிறது போர்.

லிபியாவில் ஆப்ரிக்க யூனியன் மேற்கொண்ட சமரச முயற்சி, தோல்வியில் முடிந்தது. நேற்று, கடாபி மற்றும் எதிர்தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். தன் பங்குக்கு "நேட்டோ'வும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், "கடாபி தரப்பை நேட்டோ இன்னும் கடுமையாக தாக்க வேண்டும்' என்று, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூறியுள்ளன.

லிபியாவில், அதன் தலைவர் மும்மர் கடாபி, அதிகாரத்தை விட்டு இறங்க வேண்டும் என்று கோரி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி துவங்கிய ஆர்ப்பாட்டம், அம்மாதத்திலேயே போராக மாறியது. கடாபி மற்றும் எதிர்தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் 31ம் தேதி முதல், தாக்குதலின் முழு பொறுப்பையும் நேட்டோ அமைப்பு ஏற்றுக் கொண்டது. இதற்கிடையில், இருநாட்களுக்கு முன், ஆப்ரிக்க யூனியன் பிரதிநிதிகள், கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் இறுதியில், உடனடி போர் நிறுத்தம், எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட சில பரிந்துரைகளை கடாபி ஏற்றுக் கொண்டதாக ஆப்ரிக்க யூனியன் அறிவித்தது. யூனியன் பிரதிநிதிகள், பெங்காசிக்குச் சென்று, எதிர்தரப்புடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கடாபி மற்றும் அவரது மகன்கள், லிபிய அரசியல் மற்றும் அதிகாரத்தை விட்டு ஒதுங்க வேண்டும் என்பதை எதிர்தரப்பு வலியுறுத்தியது. ஆனால், கடாபியின் மகன்கள் வெளியிட்ட அறிக்கையில், கடாபி விலகல் என்பதற்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

ஆப்ரிக்க யூனியன் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட பின், மிஸ்ரட்டா, அஜ்தாபியா, ஜின்டன் ஆகிய நகரங்களில் இருதரப்புக்கும் இடையில் கடும் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், கடாபி அதிகாரத்தை விட்டு இறங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால், லிபியாவில் மீண்டும் அமைதி திரும்புமா என்பது சந்தேகமாகி விட்டது.