Sunday, April 17, 2011

வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம்: உலக வங்கி தகவல்


வறுமையை ஒழிப்பதில் இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் தெரிவித்திருக்கின்றன.

மூன்றில் இருபங்கு வளரும் நாடுகள் வறுமை ஒழிப்பின் முக்கிய இலக்குகளை எட்டும் நிலையில் இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட "உலக கண்காணிப்பு அறிக்கை 2011' என்கிற அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட கொள்கைகள், வேகமான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இந்த இலக்குகளை வரும் 2015-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ரூ.60-க்கும் குறைவாகப் பெறுவோர் கடும் வறுமையில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்தப் பிரிவில் கடந்த 2005-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 140 கோடி பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 180 கோடியாக இருந்தது. வரும் 2015-ம் ஆண்டில் 88.3 கோடியாக இது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பத்தாண்டிலும் ஏழைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்கிற இலக்கை எட்டுவதில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் திறம்படச் செயல்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. ஆப்பிரிக்காவின் 17 நாடுகளில் அதிக அளவில் வறுமை இருக்கிறது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையின் "நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளில்' ஒன்றான இருபால் சமநிலையை அடைவதிலும் வளரும் நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளன. உயர்நிலைக் கல்வி வசதி, பாதுகாப்பான குடிநீர், தொடக்கக் கல்வியை நிறைவு செய்வது என பல்வேறு அம்சங்களிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும் இந்த முன்னேற்றம் மிக மெதுவாக இருப்பதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

பொது சுகாதாரம் தொடர்பான இலக்குகளை எட்டுவதில் 45 சதவீத வளரும் நாடுகள் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. பிரசவகால மற்றும் குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்கான இலக்குகளை எட்டுவதிலும் முறையே 39, 38 சதவீத நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன.

வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, ஐ.நா. நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் வளர்ந்த நாடுகளிலேயே கூட இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது என உலக வங்கியின் வளர்ச்சி அம்சங்களுக்கான இயக்குநர் ஹான்ஸ் டிம்மர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை முடுக்குவது, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவை குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என பன்னாட்டு நிதியத்தின் துணை இயக்குநர் பிரீடன்கம்ப் கூறினார்.

0 comments:

Post a Comment