Saturday, April 2, 2011

முன்னாள் பிரதமர் பூட்டோ மரணதண்டனை வழக்கு; 32 ஆண்டுக்கு பிறகு மீண்டும் விசாரணை




இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷீல்பிகர் அலி பூட்டோ, கடந்த 1979-ம் ஆண்டு அப்போதைய ராணுவ ஆட்சியாளர்களால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தூக்கிலிடப்பட்டார். பலரை இவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது வழக்கை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி விரும்பியது.   இதைதொடர்ந்து அக்கட்சியின் தலைவரும், அதிபருமான ஆசிப் அலிசர்தாரி இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும்படி சட்டமந்திரி பாபர் அலானுக்கு உத்தர விட்டார்.

இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடப்பட்டது. அந்த மனுவை பரிசீலனை செய்து அதிபர் சர்தாரியிடம் சுப்ரீம் கோர்ட்டு தனது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளது.

பாகிஸ்தானின் அரசியல் சட்டம் 186-வது பிரிவின்படி முக்கியமான பொதுபிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டிடம் எந்தவிதமான கேள்வியும், கருத்தும் கேட்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. அதன் அடிப்படையில் சர்தாரி இந்த வழக்கு விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டிடம் கருத்து கேட்டுள்ளார். தூக்கிலிடப்பட்ட பூட்டோ கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிரின் தந்தையும், அதிபர் சர்தாரியின் மாமனாரும் ஆவார்.

பூட்டோவை தூக்கிலிட்டவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்த வில்லை. மறைந்த ஒரு தலைவரைப்பற்றிய தவறான தகவல் வரலாற்றில் இடம் பெறக்கூடாது. உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பதற்காகதான் மறு விசாரணை கோரப்பட்டுள்ளது என்று கட்சி தலைவர்களில் ஒருவரான பாபர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment