Wednesday, April 6, 2011

அகதிப்படகு இத்தாலி கடற்பரப்பில் விபத்து- 150பேர் நீரில் மூழ்கினர், 20சடலங்கள் மீட்பு(Att;photo)

அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பாவை நோக்கி பயணம் செய்த படகு ஒன்று இத்தாலிய தீவான   Lampedusa island  கடற்பரப்பில் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் சுமார் 200பேர் பயணம் செய்ததாகவும், இவர்களில் 48பேர் இத்தாலிய கடற்படை மீட்பு பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் காணாமல் போன 130பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக இத்தாலி செய்தி சேவை நிறுவனமான ANSA  தெரிவித்துள்ளது.
கடும்காற்று வீசியதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என இத்தாலிய கரையோர காவல்படை பேச்சாளர் விற்ரோரியோ அலஸ்சான்ரோ ஏ.எவ்.பி செய்தி ஸ்தாபத்திற்கு தெரிவித்துள்ளார்.
உலங்குவானூர்த்தி மற்றும் படகுகள் மூலம் 48 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் 20 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லம்பெயுசா தீவிலிருந்து 63கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கடற்பகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த படகு வடஆபிரிக்காவிலிருந்து புறப்பட்டதாகவும் துனிசியா, லிபியா நாடுகளைச்சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலும் பயணம் செய்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இத்தாலி கரையோர காவல்படை பேச்சாளர் அலஸ்சான்ரோ தெரிவித்துள்ளார்.
காப்பாற்றப்பட்டவர்கள் லம்பெயுசா தீவில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கான முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துனிசியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என இத்தாலிய உள்துறை அமைச்சர் ரொபேர்ட்டோ மரோனி தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்குடன் இந்த வருடத்தில் சுமார் ஆயிரம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் லம்பெயுசா தீவுக்கு வந்துள்ளதாக இத்தாலிய உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே வந்திருக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 20ஆயிரம் பேருக்கு 6மாத வதிவிட அனுமதி வழங்கப்படும் என்றும் புதிதாக வருபவர்கள் அந்தந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்றும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மரோனி தெரிவித்துள்ளார்.  (Photo by ANSA)

0 comments:

Post a Comment