Wednesday, April 13, 2011

லிபியாவில் மீண்டும் வெடிக்கிறது போர்.

லிபியாவில் ஆப்ரிக்க யூனியன் மேற்கொண்ட சமரச முயற்சி, தோல்வியில் முடிந்தது. நேற்று, கடாபி மற்றும் எதிர்தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். தன் பங்குக்கு "நேட்டோ'வும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், "கடாபி தரப்பை நேட்டோ இன்னும் கடுமையாக தாக்க வேண்டும்' என்று, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூறியுள்ளன.

லிபியாவில், அதன் தலைவர் மும்மர் கடாபி, அதிகாரத்தை விட்டு இறங்க வேண்டும் என்று கோரி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி துவங்கிய ஆர்ப்பாட்டம், அம்மாதத்திலேயே போராக மாறியது. கடாபி மற்றும் எதிர்தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் 31ம் தேதி முதல், தாக்குதலின் முழு பொறுப்பையும் நேட்டோ அமைப்பு ஏற்றுக் கொண்டது. இதற்கிடையில், இருநாட்களுக்கு முன், ஆப்ரிக்க யூனியன் பிரதிநிதிகள், கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் இறுதியில், உடனடி போர் நிறுத்தம், எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட சில பரிந்துரைகளை கடாபி ஏற்றுக் கொண்டதாக ஆப்ரிக்க யூனியன் அறிவித்தது. யூனியன் பிரதிநிதிகள், பெங்காசிக்குச் சென்று, எதிர்தரப்புடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கடாபி மற்றும் அவரது மகன்கள், லிபிய அரசியல் மற்றும் அதிகாரத்தை விட்டு ஒதுங்க வேண்டும் என்பதை எதிர்தரப்பு வலியுறுத்தியது. ஆனால், கடாபியின் மகன்கள் வெளியிட்ட அறிக்கையில், கடாபி விலகல் என்பதற்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

ஆப்ரிக்க யூனியன் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட பின், மிஸ்ரட்டா, அஜ்தாபியா, ஜின்டன் ஆகிய நகரங்களில் இருதரப்புக்கும் இடையில் கடும் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், கடாபி அதிகாரத்தை விட்டு இறங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால், லிபியாவில் மீண்டும் அமைதி திரும்புமா என்பது சந்தேகமாகி விட்டது.

0 comments:

Post a Comment