Friday, April 15, 2011

7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு: பிரவீண் குமார்

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 16) மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

எந்தெந்த வாக்குச் சாவடிகள் என்பது குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் 5 தொகுதிகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சாமந்திக்குப்பத்தில் உள்ள 55, 56 எண்ணுள்ள வாக்குச் சாவடிகள், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி ஆனந்தமங்கலத்தில் உள்ள 121 எண் வாக்குச் சாவடி, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வளையவட்டம், பருத்திகுடியில் உள்ள 106, 107 எண்ணுள்ள வாக்குச் சாவடிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி 164 எண் வாக்குச் சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரத்தில் உள்ள 146 எண் வாக்குச் சாவடி ஆகியவற்றில் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

எதற்காக மறுவாக்குப் பதிவு: கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும், கடலூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை சில மர்மநபர்கள் தாக்கி சேதப்படுத்தியதாலும், திருவிடைமருதூரில் தவறான இடத்தில் வாக்குச் சாவடிகளை அமைத்ததால் வாக்காளர்களை வாக்களிப்பதை புறக்கணித்தனர்.

எந்த விரலில் மை: மறுவாக்குப் பதிவுக்கு புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே வாக்களித்த போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. மறுவாக்குப் பதிவில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கையின் நடு விரலில் மை இடப்படும்.

பொதுத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கும் வாய்ப்பை இழந்த 7 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் மறுவாக்குப் பதிவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment