லிபியா தலைவர் மும்மர் கடாபி வசிக்கும் குடியிருப்பு வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் நேற்று குண்டுகளை வீசித் தாக்கின. இந்நிலையில், மிஸ்ரட்டா நகரின் மீது கடாபி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
லிபியாவில் மிஸ்ரட்டா நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த கடாபி தரப்பு, நேற்று முன்தினம் திடீரென தாக்குதலை நிறுத்தியது. அந்நகரின் பழங்குடித் தலைவர்களும், எதிர் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக திடீர் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. ஆனால், "கடாபி தரப்பு போரை நிறுத்தவில்லை. மிஸ்ரட்டாவின் ஒரு தெருவில் பதுங்கியுள்ளனர். போரை தொடர்ந்து நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர்' என்று எதிர் தரப்பு குற்றம் சாட்டியது. இதற்கிடையில், எதிர் தரப்புக்கு 810 கோடி ரூபாய் நிதியுதவி தரப் போவதாக குவைத் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று, தலைநகர் டிரிபோலியில் உள்ள கடாபி வசிக்கும் குடியிருப்பு வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் இரண்டு குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கின. இத்தாக்குதலுக்குப் பின் லிபியா "டிவி', ஜமாகிரியா மற்றும் சகாபாபியா ஆகிய மூன்று "டிவி' நிலையங்களின் ஒளிபரப்பு அரை மணி நேரத்துக்கு தடைபட்டது. இத்தாக்குதலில் ஆறு பேர் பலியாயினர். மிஸ்ரட்டா நகரின் உள்பகுதியில் சிக்கியுள்ள கடாபி படைகளைச் சுற்றி எதிர் தரப்பு முற்றுகையிட்டுள்ளது. அதேநேரம், நகரின் வெளிப்பகுதிகளில் கடாபி படைகள் முற்றுகையிட்டுள்ளன. எனினும், தொடரும் நேட்டோ தாக்குதலால், தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் வெளியில் உள்ள படைகள் திண்டாடி வருகின்றன. தொடர்ந்து அந்நகரின் குடியிப்பு பகுதிகள் மீது, கடாபி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
0 comments:
Post a Comment