Wednesday, April 27, 2011

விக்கிலீக்ஸ்:நிரபராதிகளை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கும் அமெரிக்கா

1212
வாஷிங்டன்:சிறைக்கைதிகளை சித்தரவதைச் செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகிறது.
‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் குறைந்த அளவு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஏறத்தாழ 759 கம்பிவட ஆவணங்கள் விக்கிலீக்ஸ் மூலம் கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன. ரகசிய ஆவணங்கள் கசிந்தது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்த பெண்டகன் தீவிரவாதத்திற்கு எதிரான முயற்சிகளை இது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக விசாரணை நடத்தும் வேளையில் சிறைக்கைதிகள் கூறியதாக குவாண்டனாமோ ஆவணங்கள் கூறுகின்றன. உஸாமா பின்லேடன் பிடிக்கப்பட்டால் தாக்குதல் நடத்துவதற்காக அல்காயிதா ஐரோப்பாவில் அணு ஆயுதத்தை ஒளித்துவைத்துள்ளதாகவும் சிறைக்கைதிகள் அளித்த தகவல் என அந்த ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்யும் முறைகளைக் குறித்தும், விசாரணை நடத்தும் வழிமுறைகளைக் குறித்தும் சிறிய விபரங்கள் மட்டுமே அடங்கியுள்ளன.
குவாண்டனாமோவில் நிரபராதிகளை அமெரிக்கா சித்தரவதை செய்கிறது என குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளன. ஆனால், முதன் முதலாக இந்த சித்தரவதைகள் குறித்து, நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும் அமெரிக்காவிற்கு நன்றாக தெரியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தானவர்களின் பட்டியலிலிருந்து ஏராளமான நபர்களை விடுதலைச்செய்த பிறகும் பல வருடங்களாக நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த விவசாயிகள், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள் ஆகியோராவர்.
2009 ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமா வெளியிட்ட பிரகடனங்களில் ஒன்று ஒரு வருடத்திற்குள் குவாண்டனாமோ சிறை மூடப்படும் என்பதாகும்.
குழந்தைகள், முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என சகல தரப்பினரும் தவறான காரணங்களுக்காக இங்கு அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகியுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டவர்களில் 89 வயதான முதியவரும், 14 வயது சிறுவனும் அடங்குவர். முதியவரை சிறையில் அடைத்ததற்கு காரணம் அவரது வீட்டிற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான சில தொலைபேசி எண்கள் கிடந்தனவாம். 14 வயது சிறுவன் ஒருவர் குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டதற்கான காரணம் உள்ளூர் தாலிபான் தலைவர்கள் பற்றிய தகவல்கள் அவருக்கு தெரியும் என்ற சந்தேகத்திலாகும்.
குவாண்டானாமோ சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உய்கூர் முஸ்லிம்களும் கணிசமான பேர் உள்ளனர். மேலும் அல்காயிதா மற்றும் தாலிபானுடன் எவ்வித தொடர்புமில்லாத இங்கிலாந்து நாட்டு குடிமக்களான முஸ்லிம்களும் குவாண்டனாமோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல கைதிகளை சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கியுள்ளது அமெரிக்கா. சித்தரவதைக்கு உள்ளாகும் 100க்கும் மேற்பட்ட கைதிகள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
பிறநாடுகளில் மனித உரிமைகள் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்கா, மனித உரிமைகளை சற்றும் பேணாமல், சர்வதேச சட்டங்களை காற்றில் பறத்திவிட்டு முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவிகளை கைது செய்து சிறையிலடைத்து சித்தரவதைக்கு உள்ளாக்கி வருகிறது. மனித நேயமோ, நாகரீகமோ கடுகளவும் இல்லாமல் அமெரிக்கா நடத்திவரும் இத்தகைய அக்கிரமங்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்குமோ?

0 comments:

Post a Comment