"பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை இல்லாதவர்கள்; இதுபோன்ற "ஆன்லைன்' நண்பர்களை நம்பாமல் இருப்பதே நல்லது' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 "பேஸ்புக்' நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.
இதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். அதுபற்றியும் தனது "பேஸ்புக்' பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர் மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை. மறுநாள் அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் "பேஸ்புக்' இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக அக்கறை இல்லாத பலர் நண்பர்களாக வலம் வருகின்றனர். இன்னும் சிலர் குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.
தற்போதைய உலகில் உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த நிலையில், "பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு "நண்பர்கள்' என்பதன் உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.
"தனக்கு எது நடந்தாலும் "பேஸ்புக்' நண்பர்கள் காப்பாற்றுவர்' என நினைப்பது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"பேஸ்புக்' செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத் இதுகுறித்து கூறுகையில்,"தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை உள்ளவர்கள் "பேஸ்புக்' இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,'' என்றார்.
0 comments:
Post a Comment