உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததனையடுத்து இலங்கையின் யாழ்.குடா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. |
சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் தோட்டதொழிலாளர்கள் தங்களுடைய லயன்களுக்குள் ஓடி ஒளிந்த போதும் வீடுகளுக்குள் புகுந்தும் சிங்கள குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் இரவு 10மணிமுதல் நள்ளிரவுக்கு பின்னரும் தொடர்ந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பின்னரே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் கத்திகள், பொல்லுகளுடன் காணப்பட்ட போதிலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை என்றும் மலையக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை நேற்றிரவு யாழ் குடாநாட்டின் பல இடங்களில் வெள்ளைவானிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்கள் வீதிகளில் நின்ற பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள் வீடுகளுக்குள் அடைக்கலம் தேடி ஒடியபோது அங்கும் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். குடாநாட்டில் பரவலாக சிலர் வெடி கொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி என பரவலாக கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராணுவத்தினர் வெள்ளைவான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றிரவு பரவலாக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத் தாக்குதல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மக்கள் சிதறியோடி அருகிலிருந்த வீடுகளில் அடைக்கலம் புகுந்து கொண்டதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக வலம்புரி பத்திரிகை தெரிவித்துள்ளது. |
0 comments:
Post a Comment