எகிப்தில் ஜனவரி மாதம் நடந்த மக்கள் புரட்சியின் போது, அவர்களைச் சுட்டுக் கொல்லும்படி அப்போதைய எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தான் உத்தரவிட்டார்' என்று உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எகிப்தில், ஜனவரி மாதம் 25ம் தேதி முதல் 18 நாட்கள் அப்போதைய அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி நடந்தது. அப்புரட்சியை அடக்க துப்பாக்கிச் சூடு, தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் எனப் பல்வேறு வழிகளைக் கையாண்டும் இறுதியில் பதவியை விட்டு விலக வேண்டியவரானார் முபாரக். இந்தப் புரட்சியில் 846 பேர் பலியாயினர். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ராணுவ அரசு, ஜனவரி 25 புரட்சிக் காலத்தில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மையைக் கண்டறிய நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, 17 ஆயிரத்து 58 அதிகாரிகள் மற்றும் சாட்சிகள், 800 வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மீதான தாக்குதல் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது. நேற்று அக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து வெளியிட்டது.
குழுத் தலைவர் நீதிபதி ஒமர் மார்வான் இதுபற்றிக் கூறியதாவது:
* மக்கள் புரட்சியை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முபாரக், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
* தாரிர் சதுக்கத்தில் குவிந்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி அவர் உத்தரவிட்டார். போலீசார் மக்களின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினர்.
* குண்டடி பட்டும் சாகாதவர்களின் முகத்தை சிதைத்து, கண்களைத் தோண்டி எடுத்துள்ளனர் போலீசார். குண்டடியில் தப்பிப் பிழைத்தோரில் பெரும்பான்மையோர் கண்களை இழந்திருப்பது இதற்குச் சாட்சி.
* போலீஸ் துறையின் ஒரு பகுதியான பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
* மக்களைக் கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் போலீசார் தங்கள் வாகனங்களை அவர்கள் மீது ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.
* "மப்டி'யில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், ஒட்டகம் மற்றும் குதிரைகளில் ஏறி திடீரென தாரிர் சதுக்கத்திற்குள் புகுந்து மக்களைக் கண்மூடித் தனமாகத் தாக்கியுள்ளனர்.
* நாட்டின் 41 சிறைகளில் 11 சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியதில், பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா இயக்கம் இரண்டுக்கும் தொடர்புள்ளது. தப்பிய கைதிகள் எரிகிற தீயில் எண்ணை விட்டது போல தாக்குதலில் இறங்கியுள்ளனர்.
* இந்தக் கைதிகள் கடைகளுக்குத் தீ வைத்துக் கொள்ளையிட்ட போது, முபாரக்கின் ஆலோசனைப்படி போலீசார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அதன் மூலம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி புரட்சியை நசுக்கிவிடலாம் என்று அவர் எண்ணியிருக்கிறார்.
* ஊழல், விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள் தவிர, முபாரக் தனது இளையமகன் கமாலை அடுத்த அதிபராக்க முயன்றதும் மக்கள் புரட்சிக்கு முக்கிய காரணம். இவ்வாறு மார்வான் தெரிவித்தார். எகிப்து புரட்சியில் 846 பேர் பலியானதன் பின்னணியில் முபாரக் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக, மற்றொரு நீதிபதி ஜக்கரியா ஷலஷா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment