Wednesday, April 13, 2011

முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: ஆணையம் எச்சரிக்கை!


Praveen Kumarசென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறி்யுள்ளார்.


ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் கோட்டையில் நிருபர்களி்டம் பேசிய பிரவீண் குமார், ஒரு தொகுதியில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன.

இதுவரை தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் ரூ.33.11 கோடி பணமும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61,020 புகார்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம்  செய்தது உள்ளிட்ட புகார்கள் 55,254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2,850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பறக்கும் படையினர் அங்கு செல்வதற்குள், அவர்கள் பணத்தை கொடுத்து முடித்து ஓடி விடுகின்றனர்.

அவதூறாக பேசியதாக வந்த புகாரின் பேரில் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும் என்றார் பிரவீன் குமார்.

வாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

0 comments:

Post a Comment