Friday, April 15, 2011

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் கைது

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் செவ்வாய்க்கிழமை திடீரெனக் கைது செய்யப்பட்டார். அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 நாட்கள் நடைபெற்ற மக்களின் அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து, ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஹோஸ்னி முபாரக் (வயது 82) உல்லாச மையம் ஒன்றில் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியாக இல்லையெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஷரம் அல் ஷேக் எனும் மையத்துக்கு சட்டத் துறை அதிகாரிகள் சென்றனர். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லையென அவர் கூறியதால் அந்த மையத்திலிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர் எதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விவரங்கள் எதும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவருக்கு இதய நோய் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் மருத்துவமனையில் முபாரக்கிடம் விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷரம் அல் ஷேக் மையம் அருகே முபாரக் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முபாரக் மகன்களைக் கைது செய்து அழைத்து வந்த காவல்துறை வாகனத்தை கற்கள், பாட்டில்கள் வீசித் தாக்கினர்.

0 comments:

Post a Comment