Sunday, April 17, 2011

தேர்தல் திருவிழா ஓய்ந்தது : சூடுபிடிக்குது சூதாட்டம்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், எந்த கூட்டணி வெற்றி பெறும் என்ற சூதாட்டம் துவங்கி உள்ளது. இதில், 100 ரூபாய் முதல், அதிகபட்சமாக பல லட்ச ரூபாய் வரை பந்தயம் கட்டப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததால், சில மாதமாக தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா ஓய்ந்துள்ளது. இந்நிலையில், எந்த கூட்டணி வெற்றி பெறும், யார் முதல்வர் என்ற சூதாட்டம் துவங்கி உள்ளது.

தமிழகத்தில், அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், தி.மு.க., 90 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பணம் கட்டப்படுகிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் கருணாநிதி என்றும், ஜெயலலிதா எனவும் பணம் கட்டுகின்றனர். தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால், ஸ்டாலின் முதல்வர் ஆவார் எனவும், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஜெயலலிதா மீது உள்ள வழக்குகள் காரணமாக, மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு வருவார் எனவும் பணம் கட்டப்படுகிறது.

தமிழகத்தில் காங்., போட்டியிட்ட, 63 தொகுதிகளில், 10 தொகுதிகளுக்கு குறைவாகவே வெற்றிபெறும் எனவும், பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும், ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெறும் எனவும் பணம் கட்டப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எனவும், தனிப்பெரும்பான்மை பெற்று திராவிட கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் எனவும் இருவேறு விதமாக பந்தயம் வைக்கின்றனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா, ஒரு தொகுதியில் வெற்றி பெறும் எனவும், வெற்றி பெறாது எனவும் பந்தயம் கட்டுகின்றனர்.

இது தவிர, அமைச்சர்களாக உள்ளவர்களில் தோல்வி அடைபவர்கள் பட்டியல் தயாரித்தும் பந்தயம் கட்டுகின்றனர். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைவார் என, அ.தி.மு.க.,வினர் அதிக அளவில் பணம் கட்டி வருகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதும் பந்தய பொருளாகி உள்ளது.

இந்த சூதாட்டம் தமிழகம் முழுவதும் கனஜோராக நடந்து வருகிறது. பணம் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், பிளாட்டுகள், வீடுகளை கூட சூதாட்டத்தில் பணயமாக வைத்துள்ளனர். வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்ற சேலத்தில் வெள்ளியை வைத்தும், ஈரோட்டில் ஜவுளிகளை பணயமாக வைத்தும் சூதாட்டம் நடக்கிறது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளதால், இந்த சூதாட்டம் மேலும் சூடுபிடிக்கும் என்கின்றனர் சூதாடுவோர்.

0 comments:

Post a Comment