Tuesday, May 3, 2011

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை

டெல்லி: குஜராத் மாநிலத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலியான என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


ஐபிஎஸ் அதிகாரி ஜிஎல் சிங்கால் என்பவர் இதுதொடர்பாக தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை பிறப்பித்துள்ளது.

முன்னதாக சிங்கால் தாக்கல் செய்திருந்த மனுவில், இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி.யில் முதலில் கர்னைல் சிங், மோகன் ஜா மற்றும் சதீஷ் வர்மா ஆகியோர் இருந்தனர்.

தற்போது இவர்களில் இரண்டு பேர் குழுவில் இல்லை. சதீஷ் வர்மா மட்டுமே இருக்கிறார். எனவே விசாரணைக் குழுவை மாற்றியமைத்து மீண்டும் மூன்று பேர் இடம் பெறச் செய்ய வேண்டும். அதன் பின்னரே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இஷ்ரத் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. மேலும் எஸ்ஐடியை மாற்றி அமைக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த சிங்கால் தற்போது வதோதரா துணை ஆணையராக இருக்கிறார். கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத்துக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா, ஜீஷன் ஜோஹர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இந்த என்கவுண்டரை நடத்திய குழுவில் சிங்காலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment