ஜூலை 10, சிறுவன் தில்ஷானை சுட்டுக் கொன்றதாக கைதான ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள எழுமலை.
40 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் ஆயுதங்களை பராமரிக்கும் பிரிவில் ஹவில்தாரராக பணிபுரிந்தேன். பட்டப்படிப்பை முடித்துள்ள நான் லெப்டினன்ட் கர்னலாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றேன்.
நாங்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் அருகில் உள்ள குடிசை பகுதி சிறுவர்கள் வந்து பழங்கள் பறிப்பது, சுவர் ஏறி குதிப்பது, மரத்தின் மீது கல்வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இது குடியிருப்பில் உள்ள அனைவருக்குமே எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதனால் இவர்களை மிரட்டல் விடுத்து இங்கு வர விடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
என்னிடம் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கியான காலிபர்-0.30 எம்.எம். என்ற வகையான 3 அடி நீள ரைபிள் துப்பாக்கி இருந்தது. இதனை எடுத்து வந்து சிறுவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன். ஒரு சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது. அவன் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தான். கடந்த 2004-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்த துப்பாக்கியை தனிப்பட்ட உபயோகத்துக்காக வாங்கினேன்.
2008-ம் ஆண்டுடன் அதன் உரிமம் காலாவதியாகி விட்டது. அதனை புதுப்பிக்க தற்போது மாநகர் போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பித் துள்ளேன். என்னிடம் துப்பாக்கி இருப்பது பற்றி ராணுவத்திடம் சொல்லாமல் மறைத்து விட்டேன். என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன்.
சிறுவனை சுட்டதை தொடர்ந்து மறுத்து வந்தேன். ஆனால் வீட்டில் இருந்த துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்த தஸ்தாவேஜுகள் போலீஸ் கையில் சிக்கியதால் நான் மாட்டிக் கொண்டேன். ஆத்திரத்தில் சிறுவன் உயிரை பறித்து விட்டேனே என்பதை நினைக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
0 comments:
Post a Comment