Wednesday, September 28, 2011

‎"புராக்" வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்!


பகுத்தறிவாதம் பேசும் சில நண்பர்கள் மூடநம்பிக்கையை வேரறுப்பதாக எண்ணி தங்களுடைய சிந்தனையை முடமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம்சங்கள்...
1. புராக் விமானத்தில் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?

2. எரிபொருள், விமானம் இவை கண்டு பிடிக்கப்படாத காலத்தில் மேற்கூறிய புராக் விமானம் எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது?

எனவே இறை ஆற்றலினால்தான் இச்சம்பவம் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒரு போதும் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்பது அவர்களின் வாதம்.


ஒரு சின்ன பிளாஷ்பேக்: இவர்களை 1905 ஆம் ஆண்டிற்கு கூட்டிச் செல்வோம். அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்கிற 25 வயது விஞ்ஞானி ஒரு பிரம்மாண்டமான சிந்தனையை தத்துவமாக நுழைத்து மொத்த விஞ்ஞானிகளையும் கலக்கி விட்டார். அவர் ஆய்வு செய்தது ஒளியைப்பற்றி மேற்சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களுக்கும் ஒளியைப்பற்றிய விபரம் தெரிந்தால் பகுத்தரிவாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள் மட்டுமல்ல இனி எவரும் இது மாதிரி நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றி பேச மாட்டார்கள்.

பஸ் நிலையத்தில் நிற்கும் போது வழக்கம் போல உங்களை பஸ் கடந்து போகிறது. பஸ்ஸுக்குள் ஒரு சிறுவன் பந்தை எறிந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பஸ் போகும் திசையில் 10 அடி தூரத்திற்கு பந்தை எறிகிறான். அந்த ஒரு செகண்டில் பஸ் 20 அடி நகர்கிறது. பந்தின் வேகம் என்ன? பையனுக்கு செகண்டுக்குப் பத்து அடி வேகம். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு முப்பது அடி (10 + 20 = 30 அடி) எது நிஜம்? இரண்டுமே நிஜம் தான். வேகம் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்திருக்கிறது. புரிகிறது அல்லவா? கொஞ்சம் கவனமாக கவனியுங்கள். அடுத்து நம் பூமியும் ஒருவகையில் பஸ்தான். சூரியனைச் சுற்றிவரும் பஸ். என்ன வேகம்? ஒரு செகண்டுக்கு சுமார் 18 மைல். சரி சந்தோஷம். ஒளியின் வேகம் என்ன தெரியுமா? ரொம்பவும் ஜாஸ்தி. ஒரு செகண்டுக்கு 1,86,282 மைல் (கி.மீ அல்ல).


பஸ்ஸில் எறிந்த பந்துக்கு நேர்வது போல் பூமி பஸ்ஸில் எறியப்பட்ட ஒளிக்கதிருக்கு நேருமா? அதாவது பூமி சுற்றிக் கொண்டு போகும் திசையிலும், அதன் எதிர்திசையிலும் ஒளியின் வேகம் மாறவேண்டாமா? அதாவது பூமி சுற்றிக்கொண்டு போகும் திசையில் (186282+18)ம் எதிர்திசையில் (186282+18)ம் இருக்க வேண்டுமே! அப்படித்தான் தோன்றுகிறது பார்ப்போம்.

'மைக்கல்சன்' என்கிற விஞ்ஞானி 1887-ல் ஒளியின் வேகத்தை நுட்பமாகக் கணக்கிட்டுப் பரிசோதனை செய்தார். பூமி சுற்றும் திசை, எதிர்திசை, ஏன் எல்லாத் திசைகளிலும் ஒளியின் வேகத்தை அளந்து பார்த்தார். ஊஹூம்! எந்த திசையிலும் ஒளியின் வேகம் மாறவில்லை! அதே 186282 மைல்-ஒரு நொடிக்குப் பயணமாகிறது.
விஞ்ஞானி ஐன்ஸ்டைனும் தன் ஆய்வின் முடிவில் ஒளியின் வேகம் மாறாமல் இருப்பது பரிசோதிக்கப்பட்ட நிஜம். அதற்கு சரியான ஒளியின் வேகம் எதிர்பாராத விநோதமான சித்தாந்தங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். நிஜமாகவே விநோதம் தான் என்ன? மறுபடியும் பஸ்.

அடுத்த பஸ் கிடைத்து நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நகர்வதால் உங்களில் சிறுமாறுதல்கள் நிகழ்ந்தாக வேண்டும் என்றார் ஐன்ஸ்டைன் என்ன மாறுதல்கள்?

ரொம்ப சிம்பிள். பஸ் போகும் திசையில் நீங்கள் செல்லும் போது கொஞ்சம் சுருங்குகிறீர்கள். அதே சமயம் உங்கள் எடை கொஞ்சம் கூடுதலாகிறது! உங்கள் வாட்ச் கொஞ்சம் ஸ்லோவாக ஓடுகிறது என்றார். அப்போது தான் ஒளியின் வேகம் மாறாமல் இருப்பதை விளக்க முடியும்?

ஒரே ஒரு விஷயம்-பூமியில் கிடைக்கக் கூடிய நேரங்களில் இந்த எடை கூடுவது, மூஞ்சி சப்பட்டையாவது, கடிகாரம் மெள்ள ஓடுவது எல்லாம் மிகக் மிகக் குறைவாக அளவிடக் கூட முடியாத படி அவ்வளவு நுட்பமாக இருக்கும். எப்போது அளவிட முடியும்? கொஞ்சம் அதிவேகத்தில் பஸ் போனால்! உதாரணத்துக்கு ஒரு செகண்டுக்கு 2,60,000 கி.மீ வேகத்தில் போனால் அப்போது என்ன ஆகும்? ஆறடி மனிதன் மூன்றடியாக சுருங்கிவிடுவான். அவன் நூறு கிலோ எடை இருநூறு கிலோவாகி விடும். இரண்டு வருஷம் ஒரு வருஷமாகி விடும். இதுதான் ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம்.


வேகத்தால் ஏற்படும் இந்தச் சுருக்கங்களை லோரன்ஸியன் கண்டராக் ஷன் என்பார்கள் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா? ஏன்? இதெல்லாம் நம் அன்றாட அனுபவங்களும், பகுத்தறிவுக்குப் புறம்பாக இருக்கிறது என்று பகுத்தறிவாளர்கள் நினைக்கலாம். ஆனால் ஐன்ஸ்டைன் சொன்னது ஏதோ ஒரு குருட்டாம் போக்குச் சித்தாந்தமல்ல. பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இது தான் அவருடைய மகா மேதைமைக்கு சாட்சி.

விஞ்ஞானி ஐன்ஸ்டைன் சொல்லும் மாறுதல்களை உணர மிகமிக வேகம் தேவைப்படும் ஒளியின் வேகத்துக்கு மிக அருகில் சென்றால் தான் இதெல்லாம் அளவிட முடியும். அன்றாட வேகங்களில் நல்ல வேளை இந்த விளைவுகளை உணரவே முடியாது.

ஒளியின் வேகத்தின் அருகில் செல்லக் கூடியவை அணுக்கருக்கள் இருக்கும் துகள்கள் (ப்ரோட்டின், நியூட்ரான், எலக்ட்ரான் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே) இந்த வகைத்துகள்களில் ஒன்றான 'பைமெஸான்' என்ற ஒரு துகளை அதிக வேகத்திற்கு உள்ளாக்கிய பரிசோதனை செய்தபோது ஐன்ஸ்டைன் சொன்னது போல் அதன் எடை கூடியது! அதன் வாழ்நாள் அதிகமானது! விஞ்ஞான உலகம் ஸ்தம்பித்தது! நோபல் பரிசு ஐன்ஸ்டைனைத் தேடி வந்து சேர்ந்து கொண்டது.

மேற்கண்ட ஆய்வை ஒளியின் வேகத்தில் பயணிக்க செய்பவருக்கு என்ன நேர்கிறது? என்பதைப் பார்ப்போம். ஒளி வேகத்தில் இயங்கக்கூடிய வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு 'காலம்' என்பது இயங்குவதில்லை. இது தான் அறிவியல் உண்மை. ஆனால் ஒளிவேக வாகனத்தில் பயணம் செய்யக் கூடிய வரை வழியனுப்ப வந்தவர்களுக்கு அனந்த கோடி வருஷங்கள் ஆகி இருக்கும்!
அதாவது சென்னையிலிருந்து ஒளி வேக ஊர்தியில் ஒரு நாள் பயணம் (ஒரே ஒரு நாள்) பயணம் புறப்படுகிற நண்பர்; (வயது 45) அவரை வழியனுப்ப வந்த அவரது மனைவி; (வயது 40) மகன் (வயது 6) மகள் (வயது 8) இவர்கள் வழியனுப்ப இவர்; விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். இவர் பயணிப்பது ஒளி வேக ஊர்தி நொடிக்கு 1,86,282 மைல் வேகம் ஒரே ஒரு நாள் பயணத்தை முடித்துவிட்டு அதே சென்னைக்கு திரும்புகிறார். இப்போதும் அதே அவர் குடும்பத்தார் வரவேற்க வந்துள்ளனர். திருவாளர் நண்பர் வரவேற்கப்படுகிறார். மீடியாக்கள் பேட்டி கேட்கிறார்கள். மிஸ்டர் நண்பர்; நீங்கள் எத்தனை வருடம் விண்வெளியில் ஒளிவேக வாகனத்தில் பயணித்தீர்கள்?

'எத்தனை வருடங்களா...? ஒரே ஒரு நாள்...!'

'உங்க வயது என்ன நண்பரே!'

45 வயசும் ஒரு நாள் மட்டுமே! என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் கேட்கிறார்... 'யார் அந்த பாட்டியம்மா..?' எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?
'அடபோங்க சார்! அவங்க உங்க மனைவி தான்!!!'

இது காலத்தின் விபரீத விளையாட்டு இது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய் அல்ல. பித்தலாட்டம் அல்ல மோடி மஸ்தான் வேலை அல்ல! உண்மை! அதுவும் தெளிவான உண்மை!! ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது காலம் என்பது இயங்குவது இல்லை என்பது நிரூபணமாகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். இறைவன் ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு படைத்திருக்கிறான். மனிதனை படைக்க மண்ணைப் பயன்படுத்தியுள்ளான். ஜின்களைப் படைக்க நெருப்பை பயன்படுத்தியுள்ளான். வானவர்களை ஒளியால் படைக்க இறைவன் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களையும் ஒளியால் படைத்துள்ளான். 'புராக் என்ற வாகனம் தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது.' (நூல் முஸ்லிம் 234) எவ்வளவு பெரிய உண்மை.

ஒளியினால் அந்த புராக் வாகனம் படைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை? புராக் என்கிற வாகனத்தை ஓட்டி வந்தவர் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) என்கிற வானவர். அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களை அழைக்க வந்துள்ளார். நபி صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வுடைய நூரிலிருந்து (ஒளியிலிருந்து) வெளியானவர்கள் ஒரு சமயம் ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் தன் ஊசியில் கோர்ப்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தன் பக்கம் வர அவர்களின் வெளிச்சத்தில் நூலை கோர்த்ததாக ஹத்தீஸ் காணக் கிடைக்கிறது.

மேலும் நபி صلى الله عليه وسلم அவர்களின் நிழல் பூமியில் விழாது காரணம் ஒளிக்கு ஏது நிழல் இதுவும் ஹதீஸ்களில் உள்ளது.மேலும் விண்ணுலகில் பயணிக்கும் போது ஆறடி மனிதன் மூன்றடியாக குறைவதாக கண்டோம். அந்த வேகத்தில் பயணிக்கும் போது பயணிப்பவரின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிப்பது சாத்தியமாகாது என்பதை பார்க்கும் போது நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு விண்வெளியில் பயணிப்பதற்கு சாதகமாக இருப்பதற்கு வேண்டி வானவர் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் இதயத்தில் தக்க மாற்றம் செய்யப்பட்டதையும் ஹதீஸ்களில் காணமுடிகிறது.


நபி صلى الله عليه وسلم அவர்களின் விண்வெளி பயணம் இரவு இஷா தொழுகைக்குப்பிறகு இரவில் படுத்திருக்கும்போது அவர்கள் அழைத்துச் செல்லவப்பட்டார்கள். இந்த விண்வெளிப் பணயத்தைப்பற்றி நபி صلى الله عليه وسلم அவர்கள் சொல்லும் போது 'எனது பயணம் இரவுப்படுக்கையின் சூடு ஆறுவதற்குள் நடந்து முடிந்தது' என்கிறார்கள். ஒரு நாள் பயணமாக இருந்திருந்தால் பூமியில் அனந்த கோடி வருஷங்கள் ஆகியிருக்கும். எனவே அவர்களின் விண்வெளிப்பயணம் ஒரு சில நிமிடப்பொழுதில் நடந்து முடிந்திருக்கிறது. பகுத்தறிவாத நண்பர், விண்வெளி பயணம் முடித்துவிட்டு மீடியாக்களிடம் பேட்டி கொடுக்கும்போது என் விண்வெளிப்பயணம் ஒரே ஒரு நாள் மட்டும்தான் என்கிறார். ஆனால் பூமியில் பலவருடங்கள் உருண்டோடியுள்ளது.

இதே நிலை நாளை மறுமையில் விசாரணைக்காலம் நடைபெறும் நாளில், குற்றவாளிகள் தாங்கள் இப்பூவுலகில் ஒரு நாழிகையைத் தவிர அதிக நாட்கள் தங்கி இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே இவ்வுலகத்திலும் அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்ததாக குர்ஆனில் அல்லாஹ் (30.55) (76.46) கூறுகிறான். காரணம், இந்த மனிதர்கள் இறந்து தற்போது விசாரிக்கப்படும் இடத்தில் ஒரு நாள் என்பது மிலியின் ஆயிரம் வருடங்களுக்கு சமமாகவோ (குர்ஆன் 22:47) அல்லது பூமியின் 50 ஆயிரம் வருடங்களுக்கு சமமாகவோ (70.4-7) கூட இருக்கலாம். இதுதான் அந்த மனிதர்களின் குழப்பத்திற்கு காரணம்.

இந்த விஞ்ஞான உண்மையை குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. எனவே முஸ்லிம்கள் குறிப்பிடும் இறைவனும் திருகுர்ஆனும் கற்பனையோ கட்டுக்கதையோ அல்ல. இறைத்தூதர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் விண்வெளிப் பயணம் தான் இன்றைய விண்வெளிப் பயணங்களின் முன்மாதிரிப் பயணமாக இருந்தது என்பது உறுதி.

பகுத்தறிவாத(!) நண்பர்களே! நபி صلى الله عليه وسلم அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு இந்த அறிவியல் நிரூபணம் போதும் என நினைக்கிறேன்.

0 comments:

Post a Comment