Friday, May 4, 2012

நலமாக இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்''.. நக்சல்களிடமிருந்து மீண்டார் கலெக்டர் அலெக்ஸ் !


 Collector Alex Paul Menon Likely Be Released By Maoists
ராய்ப்பூர்: மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு கடந்த 13 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அலெக்ஸ் பால் மேனன் இன்று பிற்பகலுக்கு மேல் விடுவிக்கப்பட்டார். ஜக்தல்பூருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வரப்பட்ட அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிந்தல்நாரை வந்தடைந்தார். இன்று காலை அரசுத் தரப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தூதர்களாக செயல்பட்ட பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகிய இருவரும் அலெக்ஸை அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் சென்றனர். சிந்தால்நார் என்ற இடத்திற்கு அவர்கள் முதலில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் டட்மெத்லா என்ற இடத்திற்குச் சென்றனர். இது மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியாகும்.

இங்குதான் கலெக்டரை அவர்கள் சிறை பிடித்து வைத்திருந்தனர். அங்கு சென்ற பின்னர் இரு தரப்பும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் பிற்பகலுக்கு மேல் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை தூதர்களிடம் மாவோயிஸ்ட் தலைவர்கள் ஒப்படைத்தனர். அப்போது கிராமப் பழங்குடியின மக்கள் பெருமளவில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கலெக்டருடன், அரசுத் தூதர்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேறினர். அங்கிருந்து ஜக்தல்பூர் என்ற இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் சிந்தல்நாருக்குக் கிளம்பினர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர்தான் சிந்தல்நாருக்கு கலெக்டரும், அரசுத் தூதர்களும் வந்து சேர்ந்த செய்தி வெளியானது. அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அலெக்ஸை சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.

அதற்கு அவர், என்னை மீட்ட மத்திய அரசு, சட்டிஸ்கர் மாநில அரசு, தூதர்களாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலமாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள், அதன் பிறகு பேசுகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார் அலெக்ஸ்.

செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு அலெக்ஸ் பதிலளிக்கவில்லை. மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் மற்றபடி மாவோயிஸ்டுகளால் துன்புறுத்தப்பட்டது போலத் தெரியவில்லை. அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் தற்போது அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ராய்ப்பூர் அழைத்துச் செல்லவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 21ம் தேதி அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். 13 நாள் வனவாசத்திற்குப் பி்ன்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலையை உறுதி செய்தார் ஏடிஜிபி

அலெக்ஸ் பால் மேனன் விடுதலை குறித்து மாநில அரசின் தரப்பிலிருந்தோ, சுக்மா மாவட்ட நிர்வாகத் தரப்பிலிருந்தோ எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை. இருப்பினும் சட்டிஸ்கர் மாநில நக்சல் ஒழிப்புப் பிரிவு ஏடிஜிபி ராம் நிவாஸ், அலெக்ஸ் விடுதலையை உறுதிப்படுத்தியுள்ளார். அரசுத் தரப்பு தூதர்களிடம் அலெக்ஸ் பால் மேனன்ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment