SPACE X என்ற கலிபோர்னிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தேவையான உணவும் உபகரணங்களுமாக சுமார் ஐநூறு கிலோ எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்கிறது.
இது காலம் வரை அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாசா அமைப்பு மட்டுமே அமெரிக்காவின் விண்வெளி பயணங்களை மேற்கொண்டு வந்தது. ஆனால் இன்றைய பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து நாசா படிப்படியாக தனது பணிகளில் சிலவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு விண்கலங்களை இயக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க நாசா அமைப்பு விரும்புகிறது. அதற்கான பரிசோதனை முயற்சிதான் இன்றைய தனியார் ஏவுகணை மற்றும் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஆகும்.
விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்ட சரக்கு விண்கலம் அடுத்த இரண்டு நாட்கள் விண்வெளியில் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அது அங்கே சென்று அடைந்ததும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை நிறுத்தி அதில் இருக்கும் சரக்குகளை இறக்கிக்கொண்டு அதை மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்புவார்கள்.
அது மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினால், எதிர்காலத்தில் இதைப்போன்ற தனியார் விண்கலங்கள் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டிருக்கிறது. இவ்வகையான பணிகளை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் மற்ற கோள்களுக்கு மனிதர்களை அனுப்புவது போன்ற புதிய சோதனைகளில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் வேறு சில தனியார் நிறுவனங்களும் இந்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to sinthikkavum.net
0 comments:
Post a Comment