உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதி, அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி.,யாகியுள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு, முதன் முறையாக, நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மாயாவதி பதிலளித்தார்.
ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு,"தற்போதைய சூழ்நிலையில், இதற்கு பதிலளிப்பது சரியாக இருக்காது. எங்கள் கொள்கைக்கும், இயக்கத்திற்கும் தோதான வேட்பாளருக்கே ஆதரவு தரப்படும். இப்போதைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என இரண்டும், என்ன செய்கின்றன என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். யார் தத்தமது வேட்பாளர் என்பதை, இரு அணிகளும் அறிவிக்கட்டும். இந்த அணிகள் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை காத்திருந்து விட்டு, அதன் பிறகு எங்களது முடிவை அறிவிக்கிறோம்' என்றார்.
தெளிவாகட்டும்: பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு, "காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தானா என்பதே தெரியவில்லை.அதுவே, இன்னும் தெளிவாகவில்லையே' என்றார். பிஜு ஜனதா தளமும் அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ள முன்னாள் சபாநாயகரும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்களா என்று கேட்டபோது, "அவரது பெயர் முன்னிறுத்தப்பட்டுள்ளதை, பத்திரிகைகள் வாயிலாகவே அறிந்து கொண்டேன். இன்னும் நேரம் உள்ளது. சூழ்நிலைகள் முழுமையடையட்டும். அதன் பிறகு, நாங்கள் முடிவு செய்து அறிவிக்கிறோம்' என்றார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஐந்து ஆண்டு காலம் முழுமையாக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்விக்கு, "மதவாத சக்திகளை தடுப்பதற்காகவே, மத்திய ஆட்சியை வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் ஆதரிக்கிறது. இந்த ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா, கவிழுமா, கவிழாதா என்பதை எல்லாம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.
thanks to asiananban
0 comments:
Post a Comment