Friday, May 25, 2012

மாயாவதிக்கு சிலை வடித்தவர் காசுக்காக கண்ணீர் வடிக்கிறார் !


உ.பி.,யில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் சிலைகளை அமைப்பதற்கான பொருட்களை சப்ளை செய்தவர், தனக்கு கொடுக்க வேண்டிய மூன்று கோடி ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்துள்ளார். உ.பி.,யில், கடந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக் காலத்தில், லக்னோ உள்ளிட்ட பல இடங்களில், முதல்வர் மாயாவதி சிலைகள் மற்றும் அவரது கட்சியின் தேர்தல் சின்னமான யானைச் சிலைகள் ஆகியவை
அமைக்கப்பட்டன. இதற்காக, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.

புகார்:ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் ஆவ்தார் சைனி என்பவர், கோமதி நகர் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "முன்னாள் முதல்வர் மாயாவதியின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் சிலைகளை அமைப்பதற்கான பொருட்களை சப்ளை செய்யும் பொறுப்பு, எனக்கு அளிக்கப்பட்டது. 

சிலைகள் வடிவமைப்பில் முக்கியப் பொறுப்பு தரப்பட்டது. இதற்காக, 6.21 கோடி ரூபாய் செலவானது. இதில், 3.16 கோடி ரூபாய் மட்டுமே எனக்கு அளிக்கப்பட்டது. மீதமுள்ள 3.05 கோடி ரூபாய், இதுவரை எனக்கு அளிக்கப்படவில்லை. எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இந்த புகார், உ.பி., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மாயாவதி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு மின்சாரம் தொடர்பான வேலைகளைச் செய்வதற்காக, ஒப்பந்தம் எடுத்திருந்த புபேந்திர அகர்வால் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். 

தரமற்ற பொருள்:வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி, தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த குற்றத்துக்காக, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks to asiananban

0 comments:

Post a Comment