Sunday, March 10, 2013

ஜெர்மன் நாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு:7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் டி.ஜி.பி மகன் கைது!

10 Mar 2013
 
     திருவனந்தபுரம்:ஜெர்மன் நாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பியின் மகன் பிட்டி மொஹந்தி கேரளத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 
     ஒடிசா மாநில காவல் துறையின் முன்னாள் இயக்குநர் (டிஜிபி) பி.பி. மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி. இவர் கடந்த 2006-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
 
     விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், பிட்டிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அவரை பார்த்து விட்டு வர தன்னை அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரினார். அவரது தந்தை உத்தரவாதம் அளித்ததை அடுத்து, பிட்டி 15 நாள் பரோலில் அனுப்பி வைக்கப்பட்டார்.
 
     ஆனால், அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். ராஜஸ்தான் மாநில போலீஸார் அவரை தேடினர். பிற மாநில போலீஸாருக்கும் அவரைப் பற்றிய தகவல் தெரிவித்து, கைது செய்ய உதவுமாறு கோரினர்.
 
     இந்நிலையில், டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பல்வேறு பாலியல் வழக்குகளில் கைதாகி தண்டனை பெற்றவர்கள் பற்றிய பெயர் விவரங்களையும், புகைப்படத்தையும் பெரும்பாலான தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் வெளியிட்டன.
 
     இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள அரசுத் துறை வங்கிக்கு அண்மையில் கடிதம் ஒன்று வந்தது. அதில் தங்கள் வங்கியில் பாலியல் பலாத்கார குற்றவாளி ஒருவர் பணிபுரிகிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வங்கி அதிகாரிகள் அந்தக் கடிதத்தை மாநில காவல் துறை தலைவரிடம் ஒப்படைத்தனர்.
 
     இதையடுத்து, அந்த வங்கியில் ஓராண்டுக்கு முன்பு அதிகாரியாக பணிக்கு சேர்ந்த நபரை அழைத்து போலீஸார் விசாரித்தனர். அதில் அந்த நபர் பிட்டி மொஹந்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 
     கேரள போலீஸார் அவர் மீது ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிட்டி மொஹந்தியை போலீஸார் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்தத் தகவல் ராஜஸ்தான் மாநில போலீஸூக்கும் தெரிவிக்கப்பட்டு, பிட்டியை அடையாளம் காண்பிப்பதற்காக கண்ணூர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
 
     பரோலில் சென்று தலைமறைவான பிட்டி மொஹந்தி, ஆந்திரத்தில் இருந்தபடியே எம்.பி.ஏ.,படித்து முடித்துள்ளார். பின்னர் வங்கிக்கான போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, கேரளத்தில் அரசு வங்கியில் பணிக்குச் சேர்ந்துள்ளார். தன்னை ஆந்திரக்காரர் என்றே சொல்லி வந்துள்ளார்.

0 comments:

Post a Comment