புதுடெல்லி:சட்டவிரோத செயல்களின் சட்ட வரம்பில் உள்ள தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு மத்திய அரசு புதிய இலக்கணம் வகுக்க முடிவு செய்துள்ளது. ஒரு நபர் மட்டும் திட்டம் தீட்டி செய்யும் செயல்களையும் தீவிரவாதம் என்ற வார்த்தையில் உட்படுத்தி புதிய இலக்கணம் வகுக்கப்படுகிறது.
தற்போதைய இலக்கணப்படி ஏதேனும் சட்டவிரோத அமைப்பின் கீழ் செயல்படும் நபர்கள் கூட்டாக திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தும் செயல்கள் தீவிரவாதமாக கருதப்பட்டு வருகிறது. புதிய இலக்கணத்தின்படி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நபருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பிருக்குமா? இல்லையா? என்பதை ஆராயாது.
2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு தாக்குதலின் அடிப்படையில்தான் மத்திய அரசு தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கண்டித்து உமர் ஃபாரூக் அப்துல் முத்தலிப் என்ற நைஜீரிய நாட்டு இளைஞர் வெடிகுண்டுடன் விமானத்தில் ஏறி அதனை தகர்க்க முயற்சி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். ஆனால் இவருக்கு எந்த அமைப்புடனும் தொடர்பில்லை எனக் கூறப்பட்டது. திட்டத்தை தீட்டியதிலும், திட்டத்தை செயல்படுத்த முயன்றதிலும் அவர் தனிநபராக செயல்பட்டார் என கூறப்படுகிறது. இச்சூழலில்தான் தனிநபர்கள் நடத்தும் தாக்குதல்களையும் தீவிரவாத தாக்குதலின் வரம்பில் கொண்டுவரும் விதமாக தீவிரவாத வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க அரசு தீர்மானித்தது.
நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எல்லாவிதமான தாக்குதல்களையும் அதனை நடத்தும் நபருக்கு ஏதேனும் தடைச் செய்யப்பட்ட அல்லது தடைச் செய்யப்படாத தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பிருக்கிறதா? இல்லையா? என்பதை பரிசீலிக்காமல் தீவிரவாத செயல்களின் வரம்பில் உட்படுத்தும் விதமாக கூடுதல் விரிவான விளக்கம் அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான பிரிவுகளும் சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தில் உட்படுத்தப்படும். தாக்குதல் நடத்திய நபர் மரணித்தாலும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அனுமதியை வழங்கும் பிரிவும் இதில் சேர்க்க ஆலோசனை நடந்துவருகிறது.
0 comments:
Post a Comment