Sunday, October 23, 2011

லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு

லிபியா அதிபர் கடாபி கடந்த 20-ந்தேதி புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து கடாபி ஆதரவு ராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

எனவே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இடைக்கால அரசு தயாராகி வருகிறது. முதல் கட்டமாக லிபியாவின் தெருக்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மற்றும், வீடுகளில் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தி அங்கு அமைதி ஏற்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் போராட்டக்களமாக இருந்த லிபியாவை அமைதி பூங்காவாக மாற்ற முடியும் என அரசின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.லிபியா கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகாரி கடாபியின் பிடியில் இருந்தது. சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளான மக்கள் போராட்டத்தின் மூலம் கடாபியின்ஆட்சியை அகற்றியுள்ளனர்.

அதற்காக சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர் பலியாகி உள்ளது. சுதந்திரம் பெறுவதற்காக மக்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடினர். எனவே, லிபியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை லிபியா பிரதமர் முகமது ஜிப்ரில் தெரிவித்தார்.

சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், புதிய தலைவரும் அறிவிக்கப்பட உள்ளார்,. எனவே, பிரதமர் பதவியில் இருந்து முகமது ஜிப்ரில் விலகுகிறார். இன்னும் அங்கு 8 மாதத்தில் தேசிய கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அதில் பொது மக்கள் ஓட்டு போட்டு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். கடந்த 42 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா மக்கள் ஓட்டு போட உள்ளனர்.

0 comments:

Post a Comment