Thursday, October 27, 2011

துபாய்: சம்பளம் தராத முதலாளியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியருக்கு மரணதண்டனை?

சுமார் 45,000 திர்ஹம்கள் சம்பள பாக்கி தராத காரணத்தால் தன் முதலாளியை சுத்தியலால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு துபாய்  நீதிமன்றம் முதல் விசாரணை நிலையில் மரணதண்டனைக்குப் பரிந்துரைத்துள்ளது.

சுமார் 35 வயதுடைய என்.கே என்னும் பெயர்ச் சுருக்கம் கொண்ட குற்றவாளி திட்டமிட்டே இந்தக் கொலையைச் செய்ததாகவும், சுத்தியல், மற்றும் கத்தியை இதற்காகவே வாங்கியதும் நிரூபணமானதாக காவல்துறை சார்பு அரசு வழக்குரைஞர் தலைவர் காலித் அல் ஜரூனி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும், "இல்லை, இந்தக் கொலையை நான் செய்யவில்லை" என்றே குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடியதாகத் தெரிகிறது.
 நிலுவையிலுள்ள சம்பளத் தொகைத் தொடர்பாக, கொலையுண்டவருக்கும் குற்றவாளிக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. என்.கே என்ற அந்த நபர் எஸ். ஆரின் நிறுவனத்தில் வாகனச் சாரதியாக பணி புரிந்துவந்தவராம்.

சம்பவத்தன்று கொலையுண்ட எஸ்.ஆர்-க்கு தொலைபேசிய என்.கே , வீட்டில், எஸ். ஆர் தனிமையில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, தான் அவரை வீட்டில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி வீட்டுக்குச் சென்ற என்.கே முதலில் சுத்தியலால் பலமுறை தாக்கியதில் எஸ். ஆர் பலவீனமடைய, அதன்பின் அவரை சுமார் 30 முறை கத்தியால்  குத்தியுள்ளார்.
காவல் அதிகாரிகளிடத்தில் குற்றத்தை என்.கே ஒத்துக்கொண்டதாக துபாய் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   எஸ். ஆருடனும்  என்.கே யுடனும்  பணிபுரிந்த ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி, "இந்தியா சென்றாலும் அவரைச் சும்மா விடப்போவதில்லை" என்று என்.கே சூளுரைத்திருந்ததாகத் தெரிவித்தார். "கவனமாக இருக்கும்படி எஸ். ஆரிடம்  கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார் அந்த மனிதவள மேலாளர்.

"நான் அந்த வீட்டுக்குச் சென்றிருந்த போது தொலைக்காட்சி அலறிக்கொண்டிருந்த சப்தமும், என்.கே யின் அலைபேசி ஒலித்துக்கொண்டிருந்த சப்தமும் கேட்டேன், பிறகு நான் காவல்துறையைத் தொடர்பு கொண்டேன்" என்றார் அந்த மேலாளர். காவல்துறை, நீதிமன்ற அனுமதியைப் பெற்று கதவை உடைத்து உள்நுழைந்த போது,  எஸ்.ஆர் இறந்துபோயிருந்தாராம்.
 

நவம்பர் 27ம் தேதி நீதிமன்றம் மீண்டும் கூடும்போது, அரசு தரப்பு சாட்சியங்கள் கோரப்படுமாம்

0 comments:

Post a Comment