Friday, October 28, 2011

சவூதி: அடுத்த பட்டத்து இளவரசர் யார்? - அமெரிக்கா ஆர்வம்!



சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசரை மன்னரே முன்வந்து, தன்விருப்பப்படி நியமிப்பதே வழக்கமாக இருந்துவந்தது. பொதுவாக, எல்லா மன்னர்களும், தன் தம்பிமார்களில் வயதின் அடிப்படையில் தனக்கு அடுத்துள்ளவரையே பட்டத்து இளவரசர்களாக இதுவரை நியமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இக்கால மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் 2006 ஆம் ஆண்டிலேயே குடும்பாலோசனை குழுமம் ஒன்றை அமைத்து, மன்னருக்கோ, பட்டத்து இளவரசருக்கோ ஏதும் நிகழ்ந்துவிட்டால், அந்தப் பொறுப்புகளுக்கான நியமனத்திற்கு இக்குழுமம் ஆலோசனை வழங்கும் என்று வகுத்திருந்தார்.

இப்போது, பட்டத்து இளவரசர் சுல்தான் மரணித்துவிட்டதால், அடுத்த பட்டத்து இளவரசராக, இதுவரை வரிசையில் மூன்றாவதாக இருந்த உள்துறை அமைச்சர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், குடும்பாலோசனை குழுமம் தனது ஆலோசனைகளை மன்னருக்கு வழங்கும் என்றும் அதனடிப்படையில் மன்னர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அமைப்பின் வழி செய்யப்படும் பட்டத்து இளவரசர் நியமனத்தில் மன்னரின் ஏகபோக உரிமை என்ற வினா எழாமல் தவிர்க்கலாம் என்பது இதன் நோக்கம் எனக்கூறப்படுகிறது. உள்துறைஅமைச்சர் இளவரசர் நாயிஃப் தற்போது தனது 78 ஆம் அகவையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மறைந்த இளவரசர் வகித்த பாதுகாப்புத் துறை அவரது மகனும், பத்தாண்டுக் காலம் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சருமான இளவரசர் காலித் அல் சுல்தானுடைய பொறுப்பில் விடப்படலாம் என்றும், அல்லது, தற்போது ரியாத் ஆளுநராக இருக்கும் இளவரசர் சல்மான் அந்தப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மறைந்த இளவரசருக்கான துக்க அனுஷ்டிப்பு வியாழனன்று நிறைவுக்கு வருகிறது என்றும், அதன்பிறகே புதிய பட்டத்து இளவரசர், புதிய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து துணை அதிபர் ஜோ பிதென், ரிபப்ளிக் கட்சி செனட்டர் மெக் காயின், சிஐஏ 'தலைவர்' டேவிட் பெட்ரியாஸ், கிளிண்டன் காலத்து பாதுகாப்புத் துறைச் செயலர் வில்லியம் கொஹன் அடங்கிய உயர்நிலைக் குழு மறைந்த இளவரசர் சுல்தானுக்காக துக்கம் விசாரிக்க ரியாத் வந்திறங்கியுள்ளது.

சவூதி அரேபிய புதிய பட்டத்து இளவரசர் அமெரிக்கா - சவூதி இடையேயான பழமையான நட்பைப் பேணுபவராகவும் இளந்தலைமுறையின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராகவும் அமைய எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் கருத்தளித்துள்ளார்.

0 comments:

Post a Comment