8 Mar 2013
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீரில் ஊரடங்கும், முழு அடைப்புகளும் தொடருகிறது.இவ்வாரம் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 70 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. இதில் 12க்கும் அதிகமான பாதுகாப்பு படையினரும் அடங்குவர்.
செவ்வாய்க்கிழமை வடக்கு கஷ்மீரின் பாரமுல்லா நகரத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 வயதான தாஹிர் ரஸூல் ஸோஃபி என்ற இளைஞர் கொல்லப்பட்டது போராட்டம் தீவிரமடைய காரணமானது.
தலைநகரான ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் கஷ்மீரின் 10 போலீஸ் ஸ்டேசன் எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர்களான ஸெய்யித் அலிஷா கிலானியும், மீர்வாய்ஸ் உமர்ஃபாரூக்கும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இளைஞரின் மரணம் குறித்து அரசும், ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டபோதிலும் அதன் பலன் குறித்து கஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையில்லை.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கூட்டு மனசாட்சியின் படி அநியாயமாக கஷ்மீர் இளைஞர் அப்ஸல் குரு தூக்கிலிட்ட பிறகு துவங்கிய போராட்டத்தில் கொல்லப்பட்ட நான்காவது அப்பாவி நபர் தாஹிர் ரஸூல் ஸோஃபி.அப்ஸல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், முத்தஹிதா மஜ்லிஸே முஷாவராவும் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளதாக மாநில அரசும் கூறுகிறது.
தாஹிர் ரஸூலின் கொலை கஷ்மீர் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை அமளி துமளியாக்கியுள்ளது. அப்ஸல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சியான பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் பார்டியும், பி.பி.எம்மும், இதர சில எம்.எல்.ஏக்களும் ஆதரிக்கின்றனர். எவ்வித காரணமுமின்றி தேவையற்ற நடவடிக்கைதான் தாஹிர் ரஸூல் ஸோஃபியின் மரணம் என்று மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.ஆயுதப்படையினருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் AFPSA (ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்) துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் தனது கோபத்தை சட்டப்பேரவையில் வெளிப்படுத்தியிருந்தார்.
கிட்டத்தட்ட 2 வருடங்களாக அமைதியாக இருந்த கஷ்மீர், அப்ஸல் குருவை தூக்கிலிட்ட பிறகு கொந்தளிக்க துவங்கியுள்ளது.அப்ஸல் குருவுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை பெரும்பாலான கஷ்மீர் மக்கள் நம்புகின்றனர். ஆனால், போராட்டத்தை ஊரடங்கு உத்தரவு மூலம் அரசு தடை போட்டு வருகிறது. அரசு விவேகமான முறையில் செயல்படவில்லை என்றால் 2010-ஆம் ஆண்டைப்போல மீண்டும் கஷ்மீரில் போராட்டம் தீவிரமடையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment