Saturday, March 9, 2013

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பட்கல் தீவிரவாத மையம் என்பது ஐ.பியின் உருவாக்கம்!

                       8 Mar 2013 bhatkal
 
     புதுடெல்லி:பட்கல் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு தீவிரவாதியின் உருவம் மனதில் தோன்றும் அளவுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரத்தை இண்டலிஜன்ஸ் ஏஜன்சியும்(ஐ.பி), ஊடகங்களும் களங்கப்படுத்தியுள்ளன.
 
     பட்கல் – வடக்கு கர்நாடகாவில் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம். இந்நகரத்தை பெயரை களங்கப்படுத்தியது ஐ.பியும், மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், இவர்கள் அளிக்கும் செய்தியை கதைகளை ஜோடித்து வெளியிடும் ஊடகங்களுமாகும் என்று இந்நகர மக்கள் கூறுகின்றனர்.
 
     ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு பிறகு பட்கலின் பெயர் மீண்டும் ஊடகங்களில் செய்தியாக மாறியுள்ளன. பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஐ.பி, பல்வேறு மாநில ஏ.டி.எஸ்ஸுகளால் (தீவிரவாத எதிர்ப்பு படையினரால்) குற்றம் சாட்டப்படும் ரியாஸ் ஷாஹ்பந்தரி, சகோதர இக்பால் ஷாஹ்பந்தரி, யாஸீன் என்று அழைக்கப்படும் சித்தி பாபா ஆகியோர் பட்கலைச் சேர்ந்தவர்கள் என்பது இந்நகரத்தை குட்டி பாகிஸ்தானாகவும், இந்திய முஜாஹிதீனின் புகலிடமாகவும் சித்தரிக்கப்பட காரணமாகும்.
 
     பட்கல் தீவிரவாதத்தின் உறைவிடம் என்பது பொய்ப் பிரச்சாரம் என்று கூறுவது இங்குள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல.பா.ஜ.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி, ஏ.எஸ்.பி ஆகியோர் ஐ.பியின் பொய்ப் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இங்குள்ள மக்களின் வாழ்க்கையை நேரடியாக பார்க்காமல் பட்கலை தீவிரவாத மையமாக ஊடகங்களும், ஐ.பியும் முத்திரைக் குத்துவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.ஜே.டி.நாயக் கூறுகிறார். ரியாஸ், இக்பால், யாஸீன் ஆகியோர் இங்கு என்ன தீவிரவாத செயல்களை புரிந்துவிட்டார்கள்? என்பது குறித்து தொடர்புடையவர்கள் விளக்கமளிக்கவேண்டும் என்று நாயக் கூறுகிறார்.
 
     ஐ.பி கூறுவதைப் போல பட்கலில் தீவிரவாத செயல்களோ, ஸ்லீப்பர் செல்களோ கிடையாது என்று பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான சதாசிவ நாயக் கூறுகிறார். பா.ஜ.கவின் முன்னாள் எம்.எல்.ஏ சித்தரஞ்ச்ன் கொலை வழக்கில் யாஸீன் உள்பட 3 பேருக்கு தொடர்பிருப்பதையும் அவர் மறுக்கிறார். சம்பவம் நடக்கும்பொழுது ரியாஸ் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்தார்.சி.பி.ஐ விசாரணையில் கூட ரியாஸ் குறித்த விமர்சனம் இல்லை என்று சதாசிவ நாயக் தெரிவிக்கிறார்.
 
     பட்கலை குறித்து வெளியாகும் கதைகள் ஜோடிக்கப்பட்டது என்று வடக்கு கன்னடா எம்.பியான கே.டி.பாலகிருஷ்ணா குற்றம் சாட்டுகிறார்.இங்கு தீவிரவாதிகள் எவரும் இல்லை.இந்தியன் முஜாஹிதீனின் தலைவர்கள் மஹராஷ்ட்ராவில்தான் உள்ளனர். பட்கலில் இல்லை என்று அவர் கோபத்துடன் தெரிவிக்கிறார். “பட்கலில் நான் எனது சொந்த பைக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சஞ்சரிக்கிறேன்” என்று பட்கல் பாதுகாப்பு பொறுப்பை வகிக்கும் எ.எஸ்.பி சுதீர் ரெட்டி கூறுகிறார். ரிஸர்வ் ஃபாரஸ்டோடு சேர்ந்துள்ள வீட்டில் வசிக்கும் தனக்கு இதுவரை எவ்வித மிரட்டலும் விடுக்கப்படவில்லை என்று சுதீர் ரெட்டி மேலும் கூறுகிறார்.
 
     கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் இருந்து கைது செய்யப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூதும், யாஸீன் பட்கலும் இங்குள்ள அஞ்சுமன் காலேஜ் ஆஃப் இன்ஜீனியரிங்கில் பயின்றார்கள் என்பது ஐ.பியின் வாதமாகும். கல்லூரி ஆவணங்களில் யாஸீன் இங்கு படித்ததற்கான ஆதாரம் இல்லை. அதுமட்டுமல்ல, யாஸீன் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
 
     2010-ஆம் ஆண்டு யாஸீனின் சகோதரர் அப்துல் ஸமதை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் 2010-ஆம் ஆண்டு மங்களூர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்தது. துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில் இந்த கைது நிகழ்ந்தது. பெரிய தீவிரவாதியொருவர் கைது செய்யப்பட்டதாக அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூட செய்தியாளர்களிடம் தம்பட்டம் அடித்தார். பின்னர் யாஸீன் என்று தவறாக புரிந்து கைது செய்துவிட்டதில் வருந்துவதாக கூறி அப்துல் ஸமதை விடுதலைச் செய்தனர்.
 
     ஐ.பியும், ஊடகங்களும் பட்கலை தீவிரவாத மையமாக சித்தரித்தபோதிலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் உயரமான சிவனின் சிலையை காண்பதற்கு வருகை தரும் ஹிந்துமதத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எவ்வித பாதுகாப்பு பிரச்சனைகளோ, மிரட்டல்களோ உருவாகவில்லை.

0 comments:

Post a Comment